சொல்வாக்கும் செல்வாக்கும்
செல்வாக்கு இருக்கும் பலருக்கு சொல்வாக்கு இருக்கின்றது ஆனால் சிலர் சொல்வாக்கையே செல்வாக்காக கருதி வாழ்கின்றனர். சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக அபிராமி அந்தாதியின் இருபத்தாறாவது பாடலைப் படியுங்கள்.
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
விளக்கவுரை
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.