மருத்துவர்களுக்குக் கைகொடுப்போம்
கொரனா காலத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்ற கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள் மருத்துவர்கள். அவர்களைத் தவிர நம் உயிரைக் காப்பாற்ற வேற்றுக்கிரகவாசிகள் யாரும் இல்லை. நம்மைப் போல் வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களும் ஒரு தொழில் செய்து வந்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் நாம் குடும்பத்தோடு பாதுகாப்பாக வீட்டில் தனித்திருக்கும் இந்த தருணத்தில் அவர்கள் குடும்பத்தைப் பிரிந்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களால் பணி செய்ய மறுக்கவும் முடியும்.ஆனாலும் தன் தொழிலுக்கும் தான் படித்த படிப்புக்கும் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களின் சேவை மிகப் பெரிது என்றுதான் நம் பாரதப்பிரதமர் நாட்டு மக்கள் அனைவரும் வராண்டாவில் வாசலில் நின்று கைதட்டுமாறு கேட்டுக் கொண்டார். இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கைதட்டிய அற்புதத் தருணத்தைத் இந்தியத் தொலைக்காட்சிகள் மட்டுமின்றி உலனத் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. நமது ஒற்றுமை கண்டு உலகம் வியந்தது. அதன் பெருமிதம் மறைவதற்குள் திருஷ்டி வைத்தாற்போல் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது.
இறுதிவரை கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் சைமனைக் கொரனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரை நல்லடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வந்தார்கள். அடக்கம் செய்யும் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை அடக்கம் செய்யக் கூடாது என்று வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அவரை இங்கு அடக்கம் செய்தால் அதன் மூலம் எங்களுக்கும் கொரனா தொற்று ஏற்படும் என்று அஞ்சியதால் அச்சம்பவம் நடந்துள்ளது.
கொரனாவால் உயிர் இழந்தவர்களை தகுந்த எச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகே அவர்களின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறது. இறந்தவர்கள் தும்முவதில்லை. இருமுவதும் இல்லை. பிறகெப்படி கொரனா பரவும். இறந்தவர்களை எரிப்பதால் வரும் புகையினாலும் கொரனா பரவப்போவதில்லை. உடல் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே உடல் தகனம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் பயப்படுவதற்கோ வன்முறை செய்வதற்கோ எந்த அவசியமும் இல்லை. ஓடிசாவில் மருத்துவர்களை தியாகிகளாகப் பாவித்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்கிறார்கள்.
தமிழகத்தில் மருத்துவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் வருத்தமுறச் செய்யும் சம்பவங்களுக்கு இனி இடம் கொடுக்கக் கூடாது. மீறி வன்முறை செய்வோரைக் குண்டர் சட்டத்தில் சிறைபிடித்து தண்டணை வழங்குவது என காவல்துறை முடிவெடுத்திருக்கிறது. மரத்துவர்களுக்குக் கைதட்டி மகிழ்ந்த நாம் அவர்களின் குடும்பத்திற்குக் கைகொடுத்துக் காக்கவும் வேண்டும்தானே.