திருப்புகழில் விநாயகர் பாடல்கள்
முருகப்பெருமானுக்கு பாடும் திருப்புகழ் நூலில் விநாயகர் துதி அமைந்திருக்கிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே அனைத்து காரியங்களை துவங்க வேண்டும் என்பதை போல் திருப்புகழில் முருகப்பெருமானை பாடுவதற்கு முன்பு விநாயகர் பாடல்கள் பாடி அவரின் அருளை பெறுவோம்.
விநாயகர் பாடல் 1
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை …… வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை …… மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் …… செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் …… செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் …… எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் …… பெருமாளே.
விநாயகர் பாடல் 2
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண …… மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் …… அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி …… வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர …… அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை …… அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம …… முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் …… அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை …… முகவோனே.
மேலும் படிக்க : திருப்புகழ் 95 வஞ்சங்கொண்டும் (திருச்செந்தூர்)