சதுர்த்தியில் விநாயகரை சரணடைய சங்கடங்கள் தீரும்
எக்காரியத்திலும் தடை தாமதங்கள் இல்லாமல் வெற்றிகள் கிடைக்க வேண்டுமா? தொழில் வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்க வேண்டுமா? குழந்தைகள் கல்வி கலைகளில் சிறந்து விளங்க வேண்டுமா? குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயர வேண்டுமா? வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாக வேண்டுமா?
நாம் தொடர்ந்து விநாயகரை வழிபட்டு வருவதால் மேற்கண்ட தடைகள் நீங்கும். மேலும் விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தி விரதத்தையும் மாதா மாதம் தொடர்ந்து வழிபட்டு வரலாம். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி ஆகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி, சகல சவுபாக்கியம் தரக்கூடியது.
சங்கடகரசதுர்த்தி விரதம் இந்த தினம் விநாயகரை வழிபடுவதால் விநாயகரின் அருளை பரிபூரணமாக பெறலாம். சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை வேண்டி இருக்கும் விரதம். கேது தோஷமுள்ளவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களுக்கு வந்திருக்கும் சங்கடங்கள் தீர இந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருக்க கைமேல் பலன் கிடைக்கும்.
திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதம் இருந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். சதுர்த்தி நாளில் குழந்தைகள் பெயரில் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பென்சில், நோட்டுகள், உறவினர் அல்லாத குழந்தைகளுக்கு இனிப்பும் தானம் தந்து வருவதால் வீட்டு குழந்தைகளுக்கு கல்வி செல்வம் தேடிவரும்.
பிள்ளை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் சங்கட சதுர்த்தி அன்று அரிசி சாதத்தை சமைத்து பிள்ளையார் எறும்பு புற்றில் பிள்ளையாக பாவித்து தூவினால் விநாயகரின் அருளால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இவ்விரதத்தால் துன்பங்கள் நீங்கி நிலையான சந்தோஷம் கிடைக்கும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
கேது திசை புத்தி நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் 11 செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ந்து விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவித்து சதுர்த்தி நாளில் விரதம் இருக்க கடன் பிரச்சனை தீரும்.
வேலை இல்லாமல் சிரமப்படுபவர்கள், நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்படுபவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டிருக்கும் சங்கடங்கள் தீர, சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து விரதம் இருக்கலாம்.