செட்டிநாடு மண மணக்கும் ரெசிபி
கிராம புறங்களில் செய்யப்படும் சுண்டைக்காய் வத்தக் குழம்பின் செய்முறை படித்து செய்து சுவைத்து பாருங்கள். வத்தக் குழம்பு அருமையான ருசியில் இருக்கும். இதனை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் இதன் சுவைக்கு ஈடு இணை ஏதும் வர முடியாது.
தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் சமைக்கப்படும் ஒரு பிரபலமான ரெசிபி தான் சுண்டைக்காய் வத்தக் குழம்பு வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செட்டிநாடு மணமணக்கும் ரெசிபி
தேவையான பொருட்கள் : சுண்டைக்காய் வத்தல் கால் கப், வெங்காயம் நறுக்கியது கால் கப், பூண்டு தோல் உரித்து கட் செய்தது கால் கப், புளி சாறு அரை கப், கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது. நல்லெண்ணெய் 4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
மசாலாவிற்கு மல்லி ஒரு ஸ்பூன், வரமிளகாய் 8, உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன், கடலைப்பருப்பு அரை ஸ்பூன், அரிசி அரை ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், வெந்தயம் அரை ஸ்பூன், பூண்டு ஐந்து பற்கள்.
செய்முறை : ஒரு வாணலியை சூடு செய்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதங்க விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவை கொட்டி பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு புளிச்சாறு குழம்பிற்கு தேவையான சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, சுண்டைக்காய் சேர்த்து தாளித்து பின் இதனை குழம்புடன் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால் சுண்டைக்காய் வத்தக் குழம்பு தயார்.