வெஜிடபிள் அவியல், கூட்டு..!
முக்கியமான விரத தினங்களில் சமைக்கும் போது எல்லா வித காய்கறிகளையும் போட்டு காய்கறி அவியல் கூட்டு கறி செய்வது உண்டு. இதனால் விரதம் இருப்பதற்கான எனர்ஜியை இது ஈடுகட்டும். இந்த காய்கறி அவியல் கூட்டு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். காய்கறி அவியல், கூட்டு கறி.
காய்கறி அவியல்
தேவையான பொருட்கள் : முருங்கைக் காய் 2, கத்தரிக்காய் 4, தேங்காய் அரை மூடி, தயிர் ஒரு கப், தாளிக்க கடுகு, சீரகம், பச்சை மிளகாய் , மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் எண்ணெய், வரமிளகாய், கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை : முதலில் கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய் ஆகியவற்றை கழுவி விரும்பிய வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். சிறிய வெங்காயம், சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் முக்கால் பதத்தில் அரைத்து வைத்து எடுத்து வையுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்த விழுதையும் காய் கறிகளையும் போட்டு கிளறி, சற்று நேரம் வைத்து சிறிது தயிர் ஊற்றி இறக்குங்கள். தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்ட வீடே கமகமக்கும் காய்கறி அவியல் தயார்.
கூட்டு கறி
தேவையான பொருட்கள் : பயத்தம்பருப்பு 150 கிராம், சாம்பார் தூள் ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 2, தக்காளி ஒன்று, எண்ணெய் 50 கிராம், தேங்காய்ப் பால் அரை கப், கீரை, புடலங்காய், வாழைத் தண்டு ஏதாவது ஒன்று.
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய், உப்பு தேவையான அளவு. கறிவேப்பிலை சிறிது.
செய்முறை : முதலில் பயித்தம் பருப்பை கொதிக்கும் தண்ணீரில் அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளுங்கள். சிறிது ஊற வைப்பதால் மிக எளிதாக வெந்து விடும். இந்த பருப்பை சிறிது வறுத்தும் ஊற வைக்கலாம். இதனால் வாசனை தூக்கலாக இருக்கும். வெந்ததும் அதில் தேவையான காய்கறியை பொடியாக நறுக்கிப் போடவும். அத்துடன் சாம்பார் தூள், உப்பு போட்டு வேக விடுங்கள்.
வெந்ததும் இறக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து விடுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கி, பிறகு வெந்த பருப்பையும் சேர்த்து ஒன்றாக கலக்கி, தேங்காய் பாலை ஊற்றி இறக்கினால் இது சாதத்திற்கு நன்றாக இருக்கும். கீரை, புடலங்காய், வாழைத் தண்டு என எல்லாவற்றையும் கூட போடலாம்.