கலக்கலான சாம்பார் வரைட்டீஸ்..!!
சாம்பார் என்றாலே முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வைத்து தான் நிறைய பேர் சாம்பார் வைப்பார்கள். ஆனால் இதில் வேறு என்னென்ன காய்கறிகளில் சாம்பார் எப்படி வைத்தால் சுவையாக இருக்கும் என்று பார்க்கலாம்.
பாகற்காய் சாம்பார், கடலைப் பருப்பு சாம்பார், புடலங்காய் சாம்பார் இதில் பாகற்காயை வெள்ளிக் கிழமைகளில் சமைக்க கூடாது. என்பதால் வெள்ளிக் கிழமையில் பாகற்காயை செய்வதை தவிர்க்க வேண்டும்.
புடலங்காய் சாம்பார்
தேவையானவை : துவரம் பருப்பு 100 கிராம், தோல் சீவி நறுக்கிய புடலங்காய், நறுக்கியது ஒரு கப் தக்காளி, வெங்காயம் அரை கப் நறுக்கியது, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன், வெந்தயம் கால் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 கீறியது, தேங்காய்த் துருவல் ஒரு ஸ்பூன், சாம்பார் பொடி ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க : கடுகு, வெந்தயம் தலா அரை ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை : துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து கழுவி, மஞ்சள் தூள், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து வேக விடவும். புடலங்காயை நறுக்கி அதை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், புடலங்காய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி வேக விடவும். சாம்பார் பொடி, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் தாளிக்க பொருட்களை தாளித்து சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கலாம். ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாகப் பரிமாறலாம்.
பாகற்காய் சாம்பார்
தேவையானவை : துவரம் பருப்பு 100 கிராம், பாகற்காய் 100 கிராம், கொட்டை எடுத்து கழுவி நறுக்கி வைக்கவும். வெல்லம் சிறிய துண்டு, புளி கரைசல் அரை கப், நறுக்கிய கொத்தமல்லி, சிறிது மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சாம்பார் தூள் தலா ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவைக் கேற்ப.
வறுத்து அரைக்க : காய்ந்த மிளகாய், தனியா சிறிது, தேங்காய் துருவல் தலா 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு, சீரகம் தலா ஒரு ஸ்பூன், இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க : கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை : துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி கழுவிய நீரில் பாகற்காயை வெட்டி சிறிது நேரம் போட்டு எடுப்பதால் பாகற்காய் கசப்பு தெரியாது. புளி கரைசலை கொதிக்க வைத்து அதில் பாகற்காய் போட்டு வேக விடவும். வெந்த பருப்பு, உப்பு, பொடி வகைகள், அரைத்த பொடி, சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சாம்பாரில் சேர்த்தால் கடைசியாக கொத்தமல்லி, வெல்லம் சேர்த்து இறக்கினால், சுவையான பாகற்காய் சாம்பார் தயார்.
கடலைப் பருப்பு சாம்பார்
தேவையானவை : கடலைப் பருப்பு 100 கிராம், நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் தலா ஒரு கப், தக்காளி நறுக்கியது அரை கப், சின்ன வெங்காயம் தோலுரித்து நறுக்கியது கால் கப், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் தலா கால் ஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு தலா கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் மூன்று ஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : கடலைப் பருப்புடன், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சீரகம், காய்கறிகள் சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் வெந்த பருப்புகளை சேர்த்து, உப்பு சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான சுடச்சுட கடலைப் பருப்பு சாம்பார் தயார்.