காசியா! அவிமுக்தமா!
எம்பெருமான், உலகத்தின் ஐய்யன், அப்பன், ஈசன் இன்று அனைத்துமாக விளங்கும் சிவபெருமானை வணங்குவது நம் பிறவிப் பயனை தரவல்லது. காசி விஸ்வநாதரை அவிமுக்தேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
அவிமுக்தம்
யார் எந்தப் பிறவியில் எங்கு பிறந்தாலும் ஈசன் நாமம் ஓதி காசியில் இறப்பவர்களுக்கு மீண்டும் பிறவாமல் இறைவனுடன் ஐக்கியமாகி முக்தி நிலையை அடைவார்கள். இது அவிமுக்தம் என்று அழைக்கப்படுகிறது.
காசி
"காசியை குறித்துச் செல்லும் கால்களே கால்களே ஆகும் காசியை எழுத்தும் நாவே நாவெனக் கழறலாமால், காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும், காசியை இனிது காணும் கண்களே கண்களாமால்" -காசி காண்டம் (ஸ்கந்த புராணம்)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் கங்கை நதிக் கரையோரமாக எம்பிரானின் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு
உலகைப் படைக்க ஆரம்பித்த பரம்பொருளாகிய சிவபெருமான் முதலில் ஒரு புருஷனையும் ஒரு பிரக்ருதியையும் படைத்தார். அந்த புருஷனும் பிரக்ருதியும் தன்னைப் படைத்தவரை காணாமல் மிகவும் கவலையுற்றனர். அப்பொழுது வானில் ஒரு அசரீரி கிளம்பி நீங்கள் இருவரும் தவம் செய்ய வேண்டும் அதற்கு பிறகு உங்களிடம் இருந்து உயர்ந்தது ஒரு படைப்பு பெருகி வளரும் என்று கூறினார். அதற்காக பத்து மைல் நீளமும் 10 மைல் அகலமும் கொண்ட ஒரு அழகிய நகரத்தை தோற்றுவித்தார் அங்கு புருஷனான ஸ்ரீஹரி சிவப்பரம்பொருளை ஸ்தாபித்து பல ஆண்டு காலம் தவம் செய்தார். அவர் தவம் செய்யும் பொழுது அவரது திருமேனியில் இருந்து வழிந்த நீரானது நதியாக ஓடத் துவங்கியது. அதைக் கண்ட ஸ்ரீஹரி இது என்ன ஆச்சரியம் என்று எண்ணி தன் தலையை குலுக்கினார் அப்பொழுது அவரது காதணி ஒன்று கீழே விழுந்தது. அம்மணி விழுந்த இடமே மணிகர்ணிகை என்ற புண்ணிய தலம் ஆயிற்று. பிறகு புருஷனின் திருமேனியில் இருந்து வெளியேறிய நீரால் அந்த நகரம் மூழ்க தொடங்கியது. அப்பொழுது சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தால் அதை தாங்கிப் பிடித்தார்.
பிறகு சிருஷ்டியை ஆரம்பித்த ஸ்ரீஹரியின் தொப்புள் கொடியில் இருந்து ஒரு தாமரை மலர் தோன்றிற்று; அதிலிருந்து பிரம்மதேவர் தோன்றினார். பிறகு பிரம்ம தேவர் சிவனாரது கட்டளையை ஏற்று படைக்கும் தொழிலை தொடங்கினார் சிவபெருமான் தான் தாங்கிய க்ஷேத்திரத்தை காசி என்று பெயரிட்டு இவ்வுலகிலேயே விட்டுச் சென்றார்.
பெயர்காரணம்
ஸ்ரீ நாராயணரால் வழிபட்ட லிங்கமானது அவிமுக்தம் என்று அழைக்கப்படுகிறது அந்த சுவாமி அவிமுக்தேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். உலகையே படைத்த எம்பெருமானின் முதல் தலமாதலால் இங்கு சிவபெருமான் விஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
நம் முன்வினைக் கர்மங்களை அழித்து ஒழிப்பதாலேயே இந்நகருக்கு காசி என்ற பெயர் தோன்றிற்று வருணா அசி என்ற இரு நதிகள் சங்கமிப்பதால் வாரணாசி என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது. பிரளய காலத்திலும் அழியாமல் இருந்ததால் அவிமுக்தேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது மற்ற மோக்ஷபுரிகளில் இறைவனை வழிபட்டால் அவரைப் போன்றே திருமேனிப் பெற்று சாரூப்யம் எனும் முக்தி தான் கிடைக்கும். ஆனால் காசியில் சாயுஜ்யம் அதாவது இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்ற மிக மிக உயர்ந்த முக்தி சுலபமாக கிடைக்கும். நம் பாவங்களை அழித்து இகபர சுகங்களை தருபவர் விஸ்வநாதேஸ்வரர்.
காசிக்கு வடக்கே ‘வருணா’ என்ற ஆறும் தெற்கே ‘அசி’ என்ற ஆறும் இந்நகரை சுற்றி வளைத்துக் கொண்டு ஓடி கங்கையில் கலப்பதால் ‘காசி’ இப்பொழுது ‘வாரணாசி’ ஆயிற்று.
காசியாஸ் வாழ்ந்த நகரமாக இருந்ததால் காசி ஆயிற்று. காசா என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்ததால் காசி என ஆயிற்று என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். காசி என்ற சொல்லிற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள்.
சர்வசங்கார காலத்தில் திருமால், நான்முகன் முதலிய தேவர்கள் மறைந்த இடமாதலால் மகாமயானம் என்று கூறுவர்.
சிறப்பம்சம்
காசி சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி என்ற மூன்று சக்தி பீடங்களில் முதல் சக்தி பீடம் காசி ஆகும்.
காசியின் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டிலும் நீங்காது நின்று அன்பர்களுக்கு அருள் புரிகின்றனர்.
- அசிதாங்க பைரவர்
- ருரு பைரவர்
- சண்ட பைரவர்
- குரோதன பைரவர்
- உன்மத்த பைரவர்
- கபால பைரவர்
- பீஷண பைரவர்
- சம்ஹார பைரவர்
காசியில் அன்னபூரணி ஆலயம் பிரசித்தி பெற்றது அங்கு எம்பிரானுக்கே அன்னை படி அளந்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.
காசியில் அனைவருக்கும் அறிந்த கங்கையில் மாலை மங்கள ஆரத்தி பிரசித்தி வாய்ந்தது.
பல கணக்கான காட் என சொல்லப்படும் கங்கை படித்துறைகள் இருக்கிறது. அதில் முக்கியமான இருபதை கீழே குறிப்பிடுகிறேன்.
- அகல்யா பாய் காட்
- தர்பங்க காட்
- தசாஷ்வமேத் காட்
- டிக்பதியா காட்
- கங்கா மஹால் காட்
- ஹரிச்சந்திரா காட்
- சேட் சிங் காட்
- ஜெயின் காட்
- மணிகர்ணிகா காட்
- மன்மந்திர் காட்
- மானசரோவர் காட்
- நாரத் காட்
- பாண்டே காட்
- ராஜா காட்
- ராஜேந்திர பிரசாத் காட்
- சிந்தியா காட்
- சிவலா காட்
- திரிபுரா பைரவி காட்
- விஜயநகரம் காட்
அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.