ஆன்மிகம்ஆலோசனை

வைணவ திருத்தலம் திருவெள்ளரை

புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள் ஆனார் என்று நம்பப்படுகிறது.

இந்த வைணவ திருத்தலம் திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில், துறையூருக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது.

திருச்சிக்கு அருகே திருவெள்ளரை என்ற வைணவத் தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், செந்தாமரைக் கண்ணன் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். ஒரு முறை மகாலட்சுமி, திருப்பாற்கடலில் சயனத்தில் இருந்த ஸ்ரீமன் நாராயணனிடம் பணிவோடு வேண்டினாள். “பூவுலகில் உள்ள அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள திருக்கோவில்கள் அனைத்திலும், பெருமாளுக்கே முக்கியத்துவம் உள்ளது. எனக்கு அப்படிப்பட்ட பாக்கியம் இல்லையே” என்றாள்.

தாயாரின் மனக்குறையை உணர்ந்த பெருமாள், திருவெள்ளரை தலத்தில் செங்கமலவல்லி தாயாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வரமருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தாயாருக்குத்தான் முன்னுரிமை. வீதி உலாவில் கூட, தாயார் முன் செல்ல, பின்னால்தான் பெருமாள் தொடர்ந்து செல்வார்.

பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது.

கோயிலுக்கு, உத்தராயண வாயில் என்றும் தக்ஷ¢ணாயன வாயில் என்றும் (கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் உள்ளது போலவே) இரண்டு வாயில்கள் உள்ளன. தை முதல் ஆணி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷ¢ணாயன வாசல்வழியாகவும், பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.

இவ்வாசல்களை குறித்து ஒரு சிறு விளக்கம்: மனித வாழ்க்கையில் ஜனனம், மரணம் என்று இரு தனி வாசல்கள் உள்ளதாகக் கருதலாம். அவற்றில் நுழையும்போது, பரமாத்மாவை உணரும் பாக்கியம் ஆன்மாவுக்குக் கிடைக்கிறது. அதனாலேயே, பரந்தாமன், உத்தராயணத்தின் தொடக்கத்தில் சூரிய நாராயணனாகவும், தட்சிணாயனத்தின் முடிவில் கோவிந்தனாகவும் அருள் பாலிப்பதாக ஓர் ஐதீகம் உண்டு.

உத்தராயண வாசலை, ஜீவாத்மாக்கள் இப்பூவுலகிற்குள் (குபேரனின் இடம்) நுழையும் வாசலாகவும், தட்சிணாயன வாசலை, மரண லோகத்தின் (யமனின் இடம்) நுழைவாயிலாகவும் எண்ணிக் கொள்ளலாம்.

இக்கோயிலுக்கு ‘நாழி கேட்டான்’ வாயில் என்று இன்னொரு வாசலும் உண்டு ! ஒரு முறை, தனது தற்காலிக உறைவிடமொன்றுக்குச் சென்று திரும்பிய பெருமாளை மகாலஷ்மி இவ்வாசலில் வழி மறித்து, அவர் தாமதம் குறித்து கேள்வி கேட்டதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது.

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *