மாணவர்களின் கிராம புற முகாம் ஆயுத எழுத்து (ஃ) …
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஆன துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைணவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு சமூகப்பணி துறை மாணவர்கள் நடத்தும் கிராமப்புற முகாம் – ஆய்த எழுத்து(.’.) 2022.
இந்த கல்லூரி மாணவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம், தர்மத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் அம்பெலால் ஹென்றிக் நினைவு(ஏ. எச். எம் ) அறக்கட்டளையுடன் இணைந்து தர்மத்துப்பட்டி, மேலச்சொக்கநாதபுரம், குரங்கணி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூகப்பணி செய்துவருகிறார்கள்.
இந்த முகாமின் ஒரு பகுதியாக மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியின் சுவர்களுக்கு ஓவியம் தீட்டினர். மழை நீர் சேகரிப்பு, வனங்களை காப்போம், கல்வியின் முக்கியத்துவம், புத்தகம் வாசிப்பு, குழந்தை பாதுகாப்பு எண் 1098, நெகிழியை தவிர்ப்போம் போன்ற சமூக விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைந்தனர்.விழிப்புணர்வு ஓவியத்தின் பகுதியாக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் தனி தனி குழுவாக பிரிந்து பள்ளி மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதில் ஒரு குழு ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் ஓவிய போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர். மற்ற குழுவினர்கள் மாணவர்களிடயே சுகாதாரம், வாழ்வியல் மேம்பாடு, நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல், மாதவிடாய் பற்றிய சுகாதாரம், ஆண் பெண் சமத்துவம் போன்ற இன்னும் பல தலைப்புகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். பிறகு நடனம், தெருக்கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் வாயிலாக பள்ளி மாணவர்கள் இடையே கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் போதை பொருட்களுக்கு அடிமையாகுவதால் ஏற்படும் தீமையை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பு அமைத்து கொடுத்த மேலச்சொக்கநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி தேன்மொழி அவர்களுக்கு அம்முகாமின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். மதுசூதனன் மற்றும் உதவி பேராசிரியர். சிந்து அவர்கள் முகாமின் சார்பாக நினைவு பரிசை வழங்கி கௌரவித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியரும் மாணவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
தொடர்ச்சியாகவும் முகாமின் ஒரு பகுதியாகவும் தர்மத்துப்பட்டி கிராமத்திலுள்ள பொன்னம்மன் கோயில் மண்டபத்தில் இலவச பல் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் போடிநாயக்கனூரைச் சேர்ந்த எம். ஷராபிக் தீன் கலந்து கொண்டு பல் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை பொது மக்களுக்கு வழங்கினார். இம்முகாமில் தர்மத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், மற்றும் ஏ. எச். எம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திரு.மதி. ஸ்டெல்லா , அறங்காவலர் திரு. முகமது ஷேக் இப்ராஹிம், ஆய்த எழுத்து முகாமின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். மதுசூதனன் மற்றும் உதவி பேராசிரியர். சிந்து மற்றும் மாணவர்கள் மருத்துவர்க்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தனர். ஏ. எச். எம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. ஸ்டெல்லா அவர்களுக்கும் , அறங்காவலர் திரு. முகமது ஷேக் இப்ராஹிம் அவர்களுக்கும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பு பரிசு வழங்கினர். இந்த இலவச பல் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கிய மருத்துவருக்கும், முகாமை ஏற்படுத்தி கொடுத்த கல்லூரி மாணவர்களுக்கும், ஏ. எச். எம் அறக்கட்டளைக்கும் பொது மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
இது மட்டும் அல்லாது பளியர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளான கொட்டகுடி, குரங்கணி மற்றும் சோலையூர் ஆகிய இடங்களில் மாணவர்கள் மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் வாயிலாக போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் பழங்குடி மக்களின் வாழ்வாதார நிலையை கேள்விக்குறியாக தான் இன்றும் உள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் குழந்தைகள் முதல்நிலை கல்வி முடித்த பின்பு இடைநிலைக்கல்வி செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ வசதிகள் கூட எளிமையாக எட்ட முடியாத நிலையில் உள்ளது. எத்தனை மக்களுக்கு விடிவு காலம் வந்தாலும் இந்த பளியர் மக்களின் நிலை இதுதான் என்று மக்கள் விரக்தியில் கூறுகின்றார்கள்.
இந்த முகாமின் நோக்கமே மாணவர்கள் தன் சுற்றத்தை தவிர்த்து உலகில் உள்ள மக்களின் நிலையை புரிந்துகொண்டு தங்களால் இயன்றதை செய்வதும், வெறும் புத்தக எழுத்துகளாக படித்ததை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துவதும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி அறிவதும், அதை சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதும். இந்த முகாமிற்கு மாணவர்களுக்கும் கல்லூரிக்கும் பெரும் உதவியாக இருந்த ஏ எச் எம் அறக்கட்டளைக்கு நன்றி.