ஊரடங்கைக் கடைப்பிடிக்காத கொரனா காதலர்கள்
ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்படாமல் மினி சுற்றுலா மேற்கொண்டு வரும் சிலரால் கடுப்பாகி இருக்கிறது காவல் துறை. தொடர்ந்து வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பல வழிகளில் வலியுறுத்தினாலும் “இது வாலிப வயசுனு” வடிவேலு வாய்ஸ் பேசித் திரிகிறது ஒரு கூட்டம். “கொரனாவே எங்களப் பாத்தா பதறும்னு” முகத்தை விரைப்பாக வைத்துப் பேசினாலும் கால் நடுங்கக் கெத்துக் காட்டி அலைகிறது இன்னொரு கூட்டம். காவல்துறை கொரனா விஷயத்தில் புதுப்புது உத்திகளோடு பணியாற்றி வருகிறது. போலீஸ்காரர்கள் பாட்டுப் பாடினார்கள். டான்ஸ் ஆடினார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். அதற்கும் மசியாதவர்களைக் கும்மியும் விட்டார்கள்.
இருசக்கர வாகன விளக்குகளை உடைத்து விட்டார்கள் . பி.டி. வாத்தியாராகி உடற்பயிற்சி தந்தார்கள். சுற்றி வந்து சாவு மேளம் இசைத்தார்கள். சைடு லாக் போட்டு எட்டுப் போட வைத்தார்கள். உறுதி மொழி எடுக்க வைத்தார்கள். அட்வைஸ் கொடுத்தார்கள். இப்படி எத்தனை உத்திகளில் புத்தி சொன்னாலும் திருந்தாத எத்தர்கள் திரும்பத் திரும்ப வீதி உலா வருவதை நிறுத்திய பாடில்லை. இந்தச் சேட்டை பாய்ஸ்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய கட்டாயத்திற்குக் காவல்துறை வந்து விட்டது.
இனி இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஏதோ ஏப்ரல் 15 ஆம் தேதி அவற்றைத் தந்து விடுவார்கள் என நினைக்க வேண்டாம். ஊரடங்கிற்குப் பிறகு சட்ட நடைமுறை மேற்கொள்ளப்பட்ட பிறகே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தைத் திரும்பப் பெற முடியும். அதுவரை பவனி வருவதற்கு வாய்ப்பில்ல ராஜா. வழக்குப் பதிவுக்கு ஆளானால் உங்கள் எதிர்கால வேலை வாய்ப்புக்கு அது ஆப்பு வைக்கும். பாஸ்போர்ட் பெறும்போதும் சனியன் சைக்கிளில் வரும். ”ஊரடங்கை மீறி உலா போயிட்டு வர்றேன் பாத்தீயா ” என்ற ஒருநாள் வெட்டிப் பந்தாவுக்காக உங்களுக்கு நீங்களே செய்வினை வைத்துக் கொள்ள வேண்டாம்.
இன்னும் சில பெரிய இளைஞர்கள் அத்தியாவசியப் பொருள் வாங்கச் செல்கிறேன் பேர்வழி என்னும் போர்வையில் வெட்டியாக ஊர்வலம் வருகிறார்கள். காலை ஆறு மணி முதல் ஒருமணி வரை அனுமதி வழங்கப் பட்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு ஆறு மணிக்கு பால் வாங்க; எட்டு மணிக்கு காய் வாங்க; பத்து மணிக்கு மளிகை வாங்க; பன்னிரெண்டு மணிக்கு மருந்து வாங்க என்று ஸ்மார்ட்டாக ஏமாற்றி வருகிறது. இன்னும் சில மூளை வீங்கிகள் டாக்டர் எப்போதோ எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை ஏதோ ஊர்சுற்ற வழங்கப்பட்ட லைசென்ஸ் போல் கையில் வைத்துக் கொண்டு போலீசிடம் நழுவிப் புளங்காயிதம் அடைகிறார்கள்.
கொரனா தொற்றை அதிகம் பரவாமல் கடடுக்குள் வைத்திருக்கும் சிங்கப்பூர் மக்கள் நமது அவசரத்தேவை “அதிகப்படியான சுதந்திரம் இல்லை.அதிகப்படியான கட்டுப்பாடு” என்பதை உணர்ந்து நடக்கிறார்கள். அதனால் உயிர் பிழைக்கிறார்கள். பொறுப்புள்ள நாமும் அதையே பின்பற்றியாக வேண்டும். பாடை தயாராக இருக்கிறது. சங்கும் தயாராக இருக்கிறது. மயானமும் போதிய இடவசதியோடு தயாராக இருக்கிறது. எமன் படுபிசியாக நம் நாட்டை வலம் வரத் தொடங்கி விட்டான். பிணம் விழ வேண்டியதுதான் பாக்கி என்றிருக்கும் நிலையில் விழித்திருந்து விலகியிருந்து வீட்டிலிருந்து உயிர் பிழைப்போம்.
சாகத் தயாராக இருக்கும் பருத்தி வீரனாய் நீங்கள் இருந்தால் கேவலம் வியாதிக்குப் பலியாகாமல் பொது நன்மைக்காக வீரமரணமடையும் வாய்ப்பு வரும் வரை பிழைத்திருங்கள். கொரனாவை வெல்ல உழைத்திருங்கள் .