சமையல் குறிப்புவாழ்க்கை முறை

கிழங்கு டிஷ் வரைட்டீஸ்.!

கிழங்குகளில் உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என பல ரகங்கள் உள்ளன. கிழங்கை சாப்பிடும் போது உணவில் இஞ்சி, பூண்டு அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கால் வலி பிரச்சனைகள், நெஞ்சு குத்தல், வாய்வு தொல்லைகள் நீங்கும்.

இந்தப் பிரச்சினைகளின் காரணமாக பல பேர் கிழங்குகளை சேர்த்துக் கொள்வதில் லை. சேப்பங்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சேப்பங்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள் : 200 கிராம் சேப்பக்கிழங்கு, 2 தேக்கரண்டி எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு தேவைக்கு ஏற்ப. மிளகாய் வற்றல் 3, உப்பு தேவையான அளவு. கறிவேப்பிலை சிறிது.

செய்முறை : சேப்பங்கிழங்கை எடுத்து சிறிது நீர் விட்டு வேக விடுங்கள். வெந்ததும் மேல் தோலை உரித்து விட்டு வில்லைகளாக நறுக்கி வைக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் ஒரு இணுக்கு கறிவேப்பிலை போடவும்.

பிறகு சேப்பங்கிழங்கை போட்டு கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கிழங்குடன் உப்பு சேர்த்து கிளறவும். மேலும் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு, சிவக்க வறுத்து நன்றாக வெந்ததும் இறக்கலாம். செக்கச்சிவந்த சேப்பக்கிழங்கு சாப்பாட்டிற்கு சுவை கூட்டும்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு கால் கிலோ, பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 5, இஞ்சி ஒரு சிறு துண்டு, சிறிய வெங்காயம் 20, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, தேங்காய் அரைமூடி துருவல்.

செய்முறை : உருளைக் கிழங்கை நன்கு வேக விட வேண்டும். வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து விடவும். உருளைக் கிழங்கு வெந்ததும் தோல் சீவி பொடிப் பொடியாக உதிர்த்து வைக்கவும்.

அத்துடன் உப்பு மிளகாய் தூளும் சேர்த்து பிசறி வைக்கவும். இறுதியில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு , உப்பு போட்டு தாளித்து, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு கிளறி உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு தேவைப்பட்டால் தேங்காய்ப் பூவும் போட்டு இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *