பரவை முனியம்மா காலமாகி விட்டார்
கலைமாமணி விருது
“ஏய் சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டி” என்ற பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் பரவை முனியம்மா. இந்தப்பாடல் பாடுவதற்கு முன்பாகவே ஊர் முழுக்கச் சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு ஆங்காங்கே சென்று மேடைகளில் ஏறி நாட்டுப்புறப் பாடல்களை பரவச் செய்து இருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது அறிவிக்கப்படுகிறது. அதுகுறித்து இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.
அவரைப் பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இவர் எப்படி பிரபலமானார் என்று தெரியுமா…? நாட்டுப்புறப் பாடல்களில் தீவிரமாக இருந்த பரவை முனியம்மாள் நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் என்னும் ஒரு சமூக அக்கறை மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஏற்படும் விஷயங்கள் பற்றியும் பாடியபாடல்கள் பரவை முனியம்மா அவர்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்து வைத்தது. நிறைய நாட்டுப்புற பாடல்கள் பாடி இருந்தாலும் நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் பாடலை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டது. அப்படி கிடைத்த முதல் வாய்ப்பு தான் தூள் திரைப்படம்.
நடிகர் விக்ரம் ரீமா சென் ஜோதிகா ஆகியோர் நடித்த தூள் படம் தான். பரவை முனியம்மா அவர்களுடைய முதல் படம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அப்படிப்பட்ட முதல் வாய்ப்பை அவர் ஒருபோதும் மிஸ் பண்ணி விடாமல் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்தான் பட்டி தொட்டி எங்கும் பரவை முனியம்மாவை தங்கள் வீட்டு பாட்டியதாக சொல்ல வைத்தது.
இவர் பாடிய பாடல்கள்
தூள் படத்தில் இவர் பட்டையை கிளப்பிய பிறகு வரிசையாக இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து விட்டார். திரையுலகில் இவர் பாடிய பாடல்கள் என்னவென்று பார்ப்போம். தூள், காதல் சடுகுடு, தேவதையை கண்டேன், ஜெய்சூர்யா, கண்ணாடிப் பூக்கள், தகதிமிதா, நெஞ்சில் ஜில் ஜில், நாகரீக கோமாளி, கைவந்த கலை, சுயேச்சை எம்எல்ஏ, பசுபதி c/o ராசக்காபாளையம், சண்டை, பூ, தோரணை, ராஜாதி ராஜா, தமிழ் படம், மகனே என் மருமகனே, போக்கிரி ராஜா ( மலையாளம்), பவானி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
காமெடிகளில் சூப்பர் ஹிட்
நகைச்சுவை நடிகர் விவேக் உடன் இணைந்து இவர் பாடிய அனைத்து பாடல்களும் காமெடிகளில் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். முக்கியமாக கள்ளிப்பால் காமெடி நினைத்தால் நாம் குலுங்கி குலுங்கி சிரிப்போம்.
அதுமட்டுமின்றி இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபு அவர்களால் நடத்தப்பட்ட சமையல் நிகழ்ச்சிகளில் கிராமத்து சமையல் என்னும் ஒரு பகுதியை தொகுத்து வழங்கி அதில் மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய சமையலை செய்து காட்டி அசத்தி வந்தார். இப்படி நாட்டுப்புறப் பாடல்களால் புகழ் பெற்ற இவர் தொலைக்காட்சி திரைப்படங்கள் மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளுக்கும் சென்று இவர் மேடைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு எப்படி பரவை என்னும் பெயர் வந்தது தெரியுமா…?
பரவை முனியம்மாவிற்கு மதுரைக்கு அருகிலுள்ள பரவை என்னும் கிராமம். இவர் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். பெரிதாக தொழில் ஏதும் இல்லாத காரணத்தால் வீட்டிலேயே இருந்த பரவை முனியம்மாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு, கவனிப்பதற்கு கூட ஆள் இன்றி வறுமையில் இருந்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆர் நல திட்டத்தின் வாயிலாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பரவை முனியம்மாவின் பெயரில் வங்கியில் 6 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக கொடுத்திருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது முதலில் முன்வந்து மிகப்பெரிய உதவியை செய்தவர் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
காலமானார்
தற்போது உடல்நலக் குறைவில் இருந்த பறவை முனியம்மா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மதுரையில் இருக்கும் அவர் இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டுப்புறப் பாடல்களால் திரையுலகத்திற்கு அறிமுகமாகி அதற்குப்பிறகு பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இன்று மறைந்து விட்டார் என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது.