தக்காளி, சோயா உருண்டை பிரியாணி..!!
மீல் மேக்கர் என்று சொல்லக் கூடிய சோயா, சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பீன்சை செக்கில் ஆட்டி எண்ணெயாக பிரித்தெடுத்து சக்கையாக வருவது தான் மீல்ஸ் மேக்கர் ஆகும். சக்கை தானே என்று இதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். சோயா பீன்ஸில் உள்ள அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.
சோயா உருண்டை என்று சொல்ல வேண்டும். மீல்மேக்கர் என்பது இதை தயாரித்த கம்பெனியின் பெயர் ஆகும். இந்த சோயா உருண்டை வைத்து வித்தியாசமான தக்காளி பிரியாணி தயாரிக்கலாம்.
தக்காளி, சோயா உருண்டை பிரியாணி
தேவையான பொருட்கள் : சோயா உருண்டை 100 கிராம், பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, அரிசி அரை கிலோ, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், அண்ணாச்சிக்கு மொக்கு, பிரியாணி இலை, தேவையான அளவு. மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பிரியாணி தூள் தலா ஒரு ஸ்பூன். பச்சை மிளகாய் 5, இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன், கொத்தமல்லி கால் கப், உப்பு, எண்ணெய், தேவையான அளவு.
செய்முறை : சுடுநீரில் சோயா உருண்டையை சிறிது நேரம் போட்டு வைத்து ஊறியதும், இரண்டு முறை தண்ணீரில் கழுவி பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா பொருட்களை பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு, இதனுடன் சோம்பு சிறிது, அண்ணாச்சிக்கு மொக்கு சேர்த்து வதங்கியதும், நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு பிழிந்து வைத்துள்ள சோயா உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரை கிலோ அரிசிக்கு1 1/4 லிட்டர் தண்ணி விட்டு அரிசியை கழுவி போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, உப்பு காரம் சரியாக உள்ளதா என்று டேஸ்ட் பார்த்து கொள்ளவும்.
உப்பு தேவை என்றால் அதிகப்படுத்திக் கொள்ளவும். கடைசியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு கொத்தமல்லி சேர்த்து கலந்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரில் தம் இறங்கியதும் சூடாகப் பரிமாறவும். சுவையான சோயா உருண்டை தக்காளி சாதம் தயார்.