மறுஜென்மம் இல்லா அபிராமி அந்தாதி பாடல் 22
ஜெகதாம்பிகை! ஜெகத்ரக்ஷாம்பிகை! ஜெகன்மாதா!
உலகின் அன்னையானவள் காக்கும் கடவுளாக நின்றபின் கேட்பதற்கு இதுவென்று ஒன்றுமில்லாமல் அனைத்தையும் அள்ளி கொடுப்பவள். நமக்கு வேண்டியது இன்னது என்பதை நம் அம்மா அறிந்து அவ்வப்போது செய்வது போல் உலகின் அன்னை நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நமக்குத் தேவையானதை அளிப்பவள்.
மானிடராய் பிறத்தல் அரிது. அந்த மானிடப் பிறப்பை மீண்டும் பிறவாமல் இருப்பது சாலச் சிறந்தது.
மனிதனாய் நாம் பிறந்து வாழ்ந்து இறந்தபின் மீண்டும் பிறவாமல் இருக்க அன்னை அபிராமியை வேண்டுவதே அபிராமி அந்தாதியின் இருபத்திரண்டாவது ஸ்லோகம் அதனை படியுங்கள்.
22. இனிப் பிறவா நெறி அடைய
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
விளக்கவுரை
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.