திருவெம்பாவை பாடல் – 4 ஆம் நாள்
திருவெம்பாவை சிவபெருமானின் அருளைப் போற்றி பாடுவது ஆகும். வனத்தின் அமுதம் மற்றும் வேதங்கள் போற்றும் உயர்ந்த சிவபெருமானை எப்படி விளக்கினாலும் அது முடிவிலியாக இருக்கும். நான்காம் நாள் பாடல் அறிவோம்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
ஒளிவீசும் முத்தைப் போலப் புன்னகை செய்பவளே! உனக்கு மட்டும் இன்னும் விடியவில்லையா? என்று உறங்கும் பெண்ணை எழுப்புகின்றனர் தோழியர்.அதற்கு அவளோ… ‘அழகான கிளியைப் போலப் பேசும் நமது தோழிமார் எல்லாரும் வந்துவிட்டார்களா என்ன!’ என்று கேட்கிறாள்.
மேலும் படிக்க : திருவெம்பாவை பாடல் 14
அதற்கு வெளியில் இருக்கும் பெண்களோ… “நாங்கள் வந்திருப்பவர்களின் தலையை எண்ணி அதற்குப்பின் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறோம். அதுவரையில் தூங்கித் தூங்கி வீணாகக் காலத்தைப் போக்காதே…. இப்போது உடனடியாக நாங்கள் எண்ணிச் சொல்ல மாட்டோம். ஏன் தெரியுமா? வானத்தின் அமுதம் போன்றவனை, வேதங்கள் எல்லாம் கூறும் உயர்ந்த உட்பொருள் ஆனவனை, காண்பதற்கு மிக இனியவனான நம் சிவபெருமானை நாங்களெல்லாம் பாடிப்பாடி உள்ளம் கசிந்து உருகிக் கொண்டிருக்கிறோம்… வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைவாக இருந்தால் நீ எங்களோடு சேர வேண்டாம். மறுபடியும் போய்ப் படுத்துத் உறங்கிக்கொள்’ என்கின்றனர்.