உக்ரைன் போர் தொடங்கும் முன்பே திரும்பிய திருப்பூர் மாணவர்..!! அனைவரையும் மீட்க கோரிக்கை..!!
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் லோகவர்ஷன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்த கதிர்வேல் விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி லட்சுமி முத்தூர் கடை வீதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.
இவர்களின் 21 வயது மகன் கே.லோகவர்ஷன் உக்ரைன் நாட்டில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டு உக்ரைன் நாட்டில் தங்கி இருந்த இந்திய மாணவர்கள் உடனே தாய்நாடு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியது.
அதைத் தொடந்து விமானம் மூலம் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து கடந்த 22ஆம்தேதி அதிகாலை ஏர் அரேபியா விமானத்தின் மூலம் முத்தூரை சேர்ந்த மாணவர் கே.லோகவர்ஷன் இந்தியா புறப்பட்டார்.
பின்னர் துபாய் விமான நிலையம் வந்தடைந்து அங்கு 10 மணி நேரம் காத்திருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அதன் பின்னர் ரயில் மூலம் நேற்று அவர் ஈரோடு வந்தடைந்து அங்கிருந்து சொந்த ஊரான முத்தூர் வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் உக்ரைனில் போர் தொடங்கும் முன்பே மாணவர் லோகவர்ஷன் பத்திரமாக சொந்த ஊர் வந்து சேர்ந்ததால் அவரை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் , சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இவருடன் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் விடுதியின் கீழ் பகுதியில் உலா பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
அவர்களையும் இந்திய அரசு கூடிய விரைவில் பத்திரமாக மீட்கவேண்டும் என லோகவர்ஷன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.