திருப்புகழ் பாடல் 193
திருப்புகழ் முருகன் அருள் விளக்கும் அற்புதமான பாடல் ஆகும். பழநி முருகன் அருளாசியின்படி வஞ்சனையில்லா உலகில் வாழலாம். வார்த்தைகளை தரும் பொல்லாத உலகத்தினரிடமிருந்து நம்மை காக்கும் அப்பன் கந்தன் அருளுடன் வாழ்வது வாழ்க்கையாகும்.
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
வந்தவர் தங்களை வாதை கண்டவர்
வங்கண முந்தெரி யாம லன்புகள் …… பலபேசி
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
தந்தக டம்பிக ளூற லுண்டிடு
மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு …… முரையாலே
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
சங்கம மென்பதை யேபு ரிந்தவ …… னயராதே
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
தந்தசு கந்தனை யேயு கந்துடல் …… மெலிவேனோ
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
கண்கள்சி வந்திட வேக லந்தரு …… முறையாலே
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் …… மருகோனே
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
மின்பமி குந்திட வேய ணைந்தருள்
குன்றென வந்தருள் நீப முந்திய …… மணிமார்பா
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
பண்புத ருந்திரு வாவி னன்குடி
குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் …… பெருமாளே.
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர் தங்களை வாதை கண்டவர் வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் … வஞ்சனை மிகுந்த மாய வம்பு செய்பவர்கள். தம்மிடம் வந்த ஆடவர்களை துன்புறுத்துவோர். (உண்மைக்) காதல் இல்லாமல் பல அன்பு வார்த்தைகளைப் பேசி கட்டிலில் அமர்ந்து கலவி வேடிக்கைகளைத் தரும் பொல்லாதவர்கள். ஊறல் உண்டிடு மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள் … காமுகரின் வாயிதழ் ஊறலை உண்ணும் வேசியர்கள். கண்டிப்புடன் பேசும் வார்த்தைகளால் கவலையைத் தருகின்ற மோகத் துர் நடத்தையர். இனிமையான சொற்களை (வெளியில்) பேசி உள்ளத்தில் உருக்கம் இல்லாத விலைமகளிர். சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள் தந்த சுகம் தனையே உகந்து உடல் மெலிவேனோ … (இத்தகையோரின்) இணக்கத்தையே விரும்பினவனாகிய நான் தளராமல் (எப்போதும்) அவர்களிடத்தேயே உள்ளம் களிப்படைந்து, அவர்கள் கொஞ்சியும் நடனம் புரிந்தும் வேசை முண்டைகளாய் கொடுத்த சுகத்தையே விரும்பி உடல் மெலிந்து போவேனோ? கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்த அரு முறையாலே கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு … கம்சன் ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில் ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன் இருந்தும் இசை பாடி, விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே … (கண்ணனாக) விளங்கிய நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும் மருகனே, குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள் குன்று என வந்து அருள் நீப(ம்) முந்திய மணி மார்பா … யானையாகிய (ஐராவதம்) வளர்த்த வஞ்சிக் கொடி போன்ற தேவயானையையும், மான் பெற்ற மகளாகிய வள்ளியையும் இன்பம் பெருகவே அணைந்தருளும் மலை போல் வந்து அருளிய, கடப்ப மாலை முற்பட்டு விளங்கும் அழகிய மார்பனே, கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே. … பூங்கொத்துக்கள் மலரும் குளங்கள் நிரம்பிய அழகு விளங்கும் (பழநி ஆகிய) திரு ஆவினன்குடியில் உள்ள குன்றுகளின் எல்லா இடத்திலும் விளங்கி வீற்றருளும் பெருமாளே. |