திருப்பாவை திருவெம்பாவை 22 வது நாள்
திருப்பாவை திருவெம்பாவை 22 வது நாள் பாடல்கள் மார்கழி மாதம் சிறப்பைத் தருகின்றன. மார்ழ்கழி 30 நாட்களும் அதிகாலை பாடப்படும் பஜன்கள் சிறப்பு வாய்ந்தவையாகும்.
திருப்பாவை 22:
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் எல்லோரும் வந்த காரணம் என்ன? என்று கண்ணன் கேட்கிறான். உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்கவேண்டும். இனியும் அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது.
அழகு, விசாலம், போகப் பொருள்கள் நிறைந்த இந்த பூமியில் வாழும் அரசர்கள் தங்களது அபிமானம் இழந்து, உன்னுடைய அருள் நோக்கே வேண்டும் என்று கூட்டங் கூட்டமாக திருப்பள்ளி அறையின் வாசலில் நிற்பதுபோல், நாங்களும் ஸ்த்ரீத்வ அபிமானம் இழந்து வந்து நிற்கிறோம்.
உன்னை வந்து அடைவோமோ என்று எண்ணினோம், அடைந்துவிட்டோம். கிண்கிணியைப் போன்று இருக்கும் அழகிய தாமரைக் கண்ணால் எங்களை மெல்ல கடாக்ஷிக்க வேண்டும். வாடிய பயிரின் மேல் ஒரு பாட்டம் பெருமழை பொழிவதுபோல் இல்லாமல், மாத உபவாசிக்குப் புறச்சோறு இடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடாக்ஷிக்க வேண்டும்.
ஒருவன், ஒருமாத காலம் பட்டினி இருந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவனுடைய உடலுக்கு உணவுச்சத்து பிடிப்பதற்கு, சோற்றை நன்கு அரைத்து உடம்பில் பூசுவார்களாம். இது முற்காலத்தில் செய்யும் வைத்தியம். இதனால் உடம்பில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வரும்.
அதுபோல் நீ சிறிது சிறிதாகப் பார்த்தால், உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவாற்றாமை என்னும் நோய் நீங்கும். சூரியனையும் சந்திரனையும் போன்ற கண்களால் எங்களைக் கடாக்ஷித்தால் எங்கள் மீது இருக்கும் சாபமும் நீங்கும்.
திருப்பள்ளி எழுச்சி – 2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம் திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.
விளக்கம்:
திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! சூரியன் கிழக்கு திசையில் உதித்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி வெளிச்சத்தை கொடுத்து விட்டான்.
அண்ணலே! உனது கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட் டன. பூக்கள் மலர்ந்ததைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் ரீங்காரமிட்டு இசை பாடத் தொடங்கின. திருப்பெருந்துறையில் உறைந்துள்ள அழகிய பெருமானே, அருள் செல்வத்தை வாரி வழங்கும் ஆனந்த மலையே, அலைகள் அடிக்கும் கடலே, பள்ளி எழுந்தருளாய் என்று திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார் மாணிக்கவாசகர்.