ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 30 வது நாள் பாடல்கள்

திருப்பாவை, திருவெம்பாவை மார்கழி 30வது நாள் பாடல்கள் மார்கழியில் பக்தி பெருக்குடன் பாடப்படுகின்றது. இந்நாளில் நாம் இறையைப் பக்தியுடன் பாடலாம்.

திருப்பாவை -30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.

இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

திருப்பள்ளியெழுச்சி 30

புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி சிவன் உய்யக்கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.

விளக்கம்:

திருமாலும், பிரம்மனும் இந்த பூமியில் பிறக்க ஆசைப்பட்டனர், ஏக்கப்பட்டனர். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? பூமியில் பிறந்த அனைவருமே திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுவதால்தான்.

அப்படிப்பட்ட அமுதனே, உனது பரந்து விரிந்த இந்தப் பெருந்தன்மையால், எங்களையும் ஆட்கொள்வாயாக. கருணைக் கடலே, உனது நித்திரையிலிருந்து எழுந்து வந்து எம்மை ஆட்கொள்வாயாக என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.

மேலும் படிக்க ; திருப்பாவை 26 ஆம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *