திருப்பாவை திருவெம்பாவை 26வது நாள் பாடல்
திருவப்பாவை, திருவெம்பாவை நாள் பாடல்கள் மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்களும் பாடப்படுகின்றன. மார்கழியில் நாம் விஷ்ணுவை காணலாம். சிவபெருமானின் சிவ தரிசனம் அனைத்தும் நாம் காணலாம்.
திருப்பாவை – 26
மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சனியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
கண்ணன் ராஜசிங்கம் போல் சிங்கம் போல சிம்மாசனத்தில் வீற்றிருந்து, ‘பெண்களே, நீங்கள் பறை என்று சொல்லி வேறொன்றை வேண்டுகிறீர்களே, அதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று பெண்களை நோக்கி கேட்கிறான்.
அதற்குப் பெண்கள் பதில் சொல்லும் பாசுரம் இது. நாராயணன், பரமன், தேவாதிதேவன் என்றெல்லாம் அழைத்தார்கள். அந்தப் பெயர்கள் எல்லாம் பகவானுடைய பரத்துவம் என்ற மேலான நிலையைச் சுட்டிக் காட்டின.
ஆனால் இப்போது கண்ணனுடைய எளிமையும் காதலுமே இப்போது இவர்களை அழைக்கச் செய்கிறது. திருமாலே! மணிவண்ணனே! ஆலிலை மேல் பள்ளிகொள்பவனே!
மார்கழி நீராடுவதற்காக பெரியவர்கள் செய்யும் முறைமைகளில் வேண்டியவற்றைக் கேட்பாயானால், அவற்றைச் சொல்கிறோம். உலகம் நடுங்கும்படி ஒலிப்பதும், பால்போன்ற வெண்மை நிற முடையதுமான உன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் போன்ற சங்குகளும், பெருமையுடைய பறைகளும், திருப்பல்லாண்டு இசைப்பவர்களும், மங்கலமான அழகிய விளக்குகளையும், கொடிகளையும், விதானங்களையும் எங்களுக்குக் கொடுத்து அருள் செய்வாயாக. என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
இவற்றையெல்லாம் கண்ணன் அருள்கூர்ந்து தர வேண்டும் என்கிறார்கள். பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று இவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, ‘பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?’ என்று கேட்கிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள்.
மேலும் படிக்க : கணபதிக்கு படைத்து பூஜிக்க எண்ணங்கள் நிறைவேறும்
திருப்பள்ளியெழுச்சி – 26
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
ஐம்புலன்களையும் ஒடுக்கி, உன்னை உணர்கின்ற நிலையில் உள்ள உன் அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தவர்களாக உன்னைத் வணங்க வந்துள்ளனர். அவர்கள் பலரும் மையணிந்த பெண்களைப்போல் தங்களைக் கருதி உன்னை வணங்குகின்றனர்.
உமையாகிய பெண்ணின் மணவாளனே! சிவந்த தாமரை மலர்கள், கண் விழிப்பது போன்று தங்கள் இதழ்களை விரிக்கின்ற குளிர்ந்த வயல்களை உடைய திருப்பெருந்துறைச் சிவபெருமானே! எங்கள் பிறப்பினை அறுத்து எம்மை ஆட்கொண்டருளும் சிவபெருமானே! பள்ளி எழுந்தருள்க! என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.
மேலும் படிக்க : திருப்பாவை பாடல் 18