திருப்பாவை பாடல் 18
திருப்பாவை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய ஒன்றாகும். திருப்பாவையில் தாயரை வணங்கி பெருமாள் தரிசனம்பெற வேண்டும் அதற்கு அதிகாலை எழுந்து தரிசிக்க குயில் கூவத் தொடங்கியாகிவிட்டது. குயில் இனங்கள் பாடுகின்றன.
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
மத யானையைப் போன்றவனும், புறமுதுகே காட்டாத தோள் வலிமை உடையனுமான நந்தகோபாலனின் மருமகளே, நப்பின்னையே. நறுமணம் வீசும் கூந்தலை உடைய குழலியே தாழ் திறவாய். கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. குயில் இனங்கள் கூவத் தொடங்கி விட்டன. அதை வந்து பார். உனது செந்தாமரைக் கையில் குலுங்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வெளியே வந்து உன் கணவனாகிய கண்ணனின் புகழ் பாட மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து வெளியே வருவாயாக.
மேலும் படிக்க : திருப்பாவை 23 பாடல்
விளக்கம்:
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் வணங்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும்.
இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லிவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.