திருப்புகழ் சுவாமிமலை பாடல் 202
சுவாமிமலை முருகர் திருப்புகழ் பாடல் 202 இல் மனிதன் தன் சுகபோக வாழ்வை விடுத்து முருகனை பற்றுதல் பற்றி சொல்லப்பட்டுள்ளது. சுவாமிமலை முருகர் அழகிய பெண் ஒருத்தி வசப்பட்டு அவள் அங்கங்கள் மேல் பற்றுகொண்டு அதனால் தன்னை மறந்து வாழும் மானிடனை ஆட்கொண்டு சரணாகதி அடைய வைக்கும் அந்த இறை ஈர்ப்பை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
ஆரமுது கண்டு தேனென …… இதழூறல்
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
ஆனையுர மெங்கு மோதிட …… அபிராம
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
மாயுமனு வின்ப வாசைய …… தறவேயுன்
வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
வாசகம்வ ழங்கி யாள்வது …… மொருநாளே
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
ஈடழிய வென்று வானவர் …… குலசேனை
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
ராசதம றிந்த கோமள …… வடிவோனே
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
தோளுடைய கந்த னேவய …… லியில்வாழ்வே
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்று லாவிய …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து …
(விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள்
சேரக் கலந்து,
பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழ் ஊறல் ஆதரவின்
உண்டு … பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன்
என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி,
வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும்
மோதிட … வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார்
என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும்
மோத,
அபிராம மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து
கீடமில் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே … அழகிய மான்
அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு
போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய,
உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக
வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே … உனது தாமரை போன்ற
அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம்
செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ?
ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு
அழிய வென்று … இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த
அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு,
வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர
அலங்க்ருத ஆகர … தேவர்களுடைய சிறந்த சேனையை
ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி
வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே,
ராசதம் அறிந்த கோமள வடிவோனே … ராசத குணங்களின்
தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே,
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு
தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே … விடாமழை
பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து
விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே,
வயலூரில் வாழ்பவனே,
மேலும் படிக்க : திருப்புகழ் பாடல் 200 பழநி
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு
ஸ்வாமி மலை நின்று உலாவிய பெருமாளே. … நிலா
முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து
விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே