ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் – 8 (திருப்பரங்குன்றம்)

கைலாயத்தில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் . அப்போது பார்வதி தேவியின் மடியில் அமர்ந்திருந்த நமது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை புரிந்துகொண்டார்.ஆனால் அந்த புனிதமான பிரணவ மந்திரத்தை குருவால் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் மறைமுகமாக கற்றுக் கொண்டால் அதன் பயன் கிடைக்காது என தனது தாய் தந்தையர் கூறினர்.இக்குற்றத்திற்கு பலனாக முருகர் திருப்பரங்குன்றத்தில் வந்து தவம் இருந்தார். அப்போது சிவபெருமானும் பார்வதிதேவியும் அவருக்கு காட்சி அளித்தனர். இவர்கள் இருவரும் காட்சியளித்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. எனவே திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் முன்பு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அவர்களை வணங்குவது என்பது ஐதீகமாகும்.

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன …… தனதான

பாடல்

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன …… தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் …… மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு …… பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் …… வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் …… புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை …… உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ …… மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

பாடல் விளக்கம்

நான் உன்னைத் தினந்தோறும்
வணங்குவதும் இல்லை. உனது தன்மைகளை (குணங்களை) எடுத்துக் கூறுவதும் இல்லை

பல வகையான வண்ண மலர்களைக் கொண்டு உன் திருவடிகள் பொருந்த நான் வணங்கிப் பணியவும் இல்லை

ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உனது அருள் நீங்காத
உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும்
இல்லை.

ஆர்வத்தோடு உன்
மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை.

மலை போன்ற உருவமுடன்,
கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற,

கருப்பு நிறமும்,
கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள், என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற
பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம்
கொண்டும் என்னோடு போரிடும் போது,

மனம் கலங்கும் செயலும்,ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும், நைந்துபோய் யான் துன்புறும்போது

ஒரு கண அளவில், என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல்(பயப்படாதே) என்று கூறி

மயிலின் முதுகினில் நீ வருவாயாக.போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால்

ஊன் உடைந்து உடல்களிலிருந்து
சிதறின மாமிசத்தை,கழுகுகள் உண்ணவும்,

விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும், அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,

நிறைய ராகங்களில் பாடவல்ல
குயிலின் மொழி ஒத்த குரலாள்,அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்)

குங்குமம் அணிந்த மார்பில்,அழுந்தும் வாசமிகு
சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த

மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும்,
நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி,

நீரால் அபிஷேகம் செய்து,
பூக்களை நிறைய அர்ச்சித்து,தேவர்களும்,கோபத்தை நிந்தித்து
விட்ட முனிவர்களும் தொழ,

அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத்
தெவிட்டும் அளவுக்கு

ஆசையுடன் குடிக்கும்,உயர்ந்த சோலைகள் விளங்கும்,திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *