நினது திருவடி …திருப்புகழ் பாடல் -4
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் ஒவ்வொரு பாடலாக நாம் பார்த்துக்கொண்டு உள்ளோம்.நம் வாழ்வில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கட்டாயமாக ஒரு தீர்வும் உண்டு.அதை உணர்ந்து விட்டால் வாழ்க்கை அழகானது..
எந்த செயலை செய்வதற்கு முன்பும் முழு முதற் கடவுளாகிய விநாயகரை வணங்கி செல்வது வழக்கம்.அவரை வணங்கி சென்றால் நாம் நினைக்கும் செயல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. எம்பெருமான் முருகப் பெருமானின் திருவடிகளை சேர்வதற்கும் முன்பாக கூட விநாயகப் பெருமானை வணங்குவதை அருணகிரிநாதர் எவ்வளவு அழகாக தனது பாடல் வரிகளில் கூறியுள்ளார் என்பதை காண்போம்…
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன தத்தன தத்தன …… தனதான
……… பாடல் ………
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு …… நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை …… வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை …… மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் …… செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் …… செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் …… எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் …… பெருமாளே.
பாடல் விளக்கவுரை
(முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல்
(இவைகளை) நினைவில் கொள்ளும் அளவு அறிவினை நான் பெறுவதற்கு நன்றாக நிரம்பச் செய்யப்பட்ட அமுது, முக்கனிகள் என்று கூறப்படும் ( மா, பலா, வாழை) பழ வகைகள், அப்பமும், புதிய பாலும், தேனும், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன்,
லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத
இனிமையான பல்வேறு வாழைப்பழ வகைகளும், இள நீரும் ஆகிய நிவேதனப்
பொருட்களைக் கொண்டு
மிகுந்த மனமகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும்… ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்* உடை வளரும் யானை முகத்தை உடைய ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே
பொருந்திய மலர் மாலையை கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களை கொண்டு துதித்தும், கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில்
குட்டியும் …. (அந்த
விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில்
அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன்.
தெனன தெனதென தெத்தென
இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர்,
திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய
மூளைத் திசுக்கள்,
பிளந்த வயிற்றில்
நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள்,
இவைகளோடு
வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில்
திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம்
செகசே சே என ஒலிக்கவும்,
துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப்
பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க,
டிமுட டிமு
டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று
பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, சரண பைரவி என்னும் தேவதைகள்
சுற்றிக் கூத்தாட, எதிர்த்து
வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.