ஆன்மிகம்ஆலோசனை

Thirupugazh Song 305 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம்

அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.

பாடல் வரிகள்

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
     கெடுபிறப் பறவிழிக் …… கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
     கிகள்தமைச் செறிதலுற் …… றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
     றறவுநெக் கழிகருக் …… கடலூடே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
     றடியிணைக் கணுகிடப் …… பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
     பொறியிலச் சமணரத் …… தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
     புகலியிற் கவுணியப் …… புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்
     தவர்திருப் புதல்வநற் …… சுனைமேவுந்

தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்
     தணியினிற் சரவணப் …… பெருமாளே.

பாடல் விளக்கம்

பொய்ம்மொழி பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்புலன்களின் வழியே செல்லுபவர்களை, கெட்ட இப்பிறப்பு நற்பிறப்பு ஆகாமல் அழியும்படி விழிக்கின்ற விழியை உடைய கெட்டவர்களை, அறிவில்லாத குருடர்களை, திருடர்களை, சமயவாதிகளை நான்
நெருங்குதலுற்று, அறிவு சற்றும் அறிதல் இல்லாமல், தளர்ச்சி உற்று, மனம் பக்தியால் நெகிழ்தல் இல்லாமல், குறைபாடு அடைந்து மிகவும் கெட்டு அழிவு தரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போதல் நீங்கி, முன்னுக்கு வந்து, நல்லுணர்வு பெறும் நலமான வழியில் மேம்பாடு அடைந்து, உன் திருவடியிணையை
அணுகப் பெறுவேனோ?

அறிவுள்ள கூன் பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய
அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும் சிவ மணத் திருநீற்றை மதுரையில் பரப்பினவரும், புகலியில் சீகாழியில் உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய
திருஞான சம்பந்தரே, அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,
திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும்
பூவைத் தருகின்ற திருத்தணிகையில்
வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *