Thirupugazh song 302 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 302 வெற்றி செயவுற்ற (திருத்தணிகை)
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.
பாடல் வரிகள்
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட …… விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு …… மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு …… மழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று …… வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த …… கழல்வீரா
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த …… ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு …… முருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட …… பெருமாளே.
பாடல் விளக்கம்
ஜெயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும், வெட்ட வெளியிலும், தெருக்களிலும், வட்டப் பறையென நின்று நெருப்பை அள்ளி வீசி ஒளி
பரப்பும் நிலவினாலும், வசைமொழிகளை
விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல மாதர்களின் ஏச்சாலும், இசையை எழுப்பும் புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல், பக்தி நெறியை
எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க உயர்ந்த பச்சை மயில் வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன்.
நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன் எரிந்து போக, நடனம் செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில்
பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே, தேன்ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற
வள்ளி அன்பு கொள்ளும்படியாக அவளை நாள்தோறும் கெட்டியாக அணைக்கும் மார்பனே அலை வீசும் கடல்கள் சூழ்ந்த புவியில் திருத்தணியில் எப்பொழுதும்
எழுந்தருளியிருக்கும் முருகனே,
அஷ்ட குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள் தேவர்களை அடைத்த
சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே…