ஆன்மிகம்ஆலோசனை

Thirupugazh song 301: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 301

அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.

பாடல் விளக்கம்

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
     பினுக்கெதி ராகும் …… விழிமாதர்

மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
     சமத்திடை போய்வெந் …… துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
     கருக்குழி தோறுங் …… கவிழாதே

கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
     கழற்புக ழோதுங் …… கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
     சியைப்புணர் வாகம் …… புயவேளே

பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
     பொருக்கெழ வானும் …… புகைமூளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
     திறக்கம ராடுந் …… திறல்வேலா

திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
     திருத்தணி மேவும் …… பெருமாளே..

பாடல் விளக்கம்

வினையைப் பெருக்குவதற்குக் காரணமான
மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும் கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீது வைத்த ஆசையால்மிகப் பலவான அவமானச்
செயல்களில் நுழைந்து,விரும்பிய காமரசப்
போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித் தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி, கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன் சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை ஞானத்தைத் தந்தருள்க.

புனத்துக்குப் போய், கொடிய வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த அழகிய புயங்களை உடையவனே, கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும்,
கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும்,கோபத்துடன், சூரனுடைய கனத்த, திண்ணிய மார்ப பிளவுபடும்படியாகவும் போர்செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும் கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *