Thirupugazh song 298 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம்
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது
பாடல் வரிகள்
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி …… பதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி …… வயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை …… யழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு …… கழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் …… மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த …… ணியில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய …… எறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய …… பெருமாளே.
பாடல் விளக்கம்
வட்ட வடிவும் ஒளியும் உள்ள மார்பினைக் கொண்ட மனைவியும், அவளிடம் நான்
பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகளும், வயது முதிர்ந்த அன்னை, எனது ஊர், என் நாடு, எனக்கு உள்ள தோட்டம், வீடு, செல்வம், சம்பாதித்த பொருள், மற்ற உறவினர்
கூட்டம், என் அறிவு – இவை எல்லாம் என்னை விட்டு நீங்க, நன்றாக ஓட்டி, மிகவும் நெருங்கும்
பெரிய எருமை வாகனத்தின் மேல் வரும் கால தூதராகிய மூடர்கள் பாசக் கயிற்றால் என்னைப் பூட்டி அழைப்பதற்கு முன் நான் முக்தி வீட்டை அணுகிச் சேரவும், ஞானியர்போல் என்னை ஆக்கவும்,
வேதத்தினுள்ளும், குரா மலர்களினுள்ளும் விளங்குகின்ற உன் இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக.
நெற்றிப் பட்டமும், நான்கு பெரிய தந்தங்களும், தொங்கும் துதிக்கையும் உடைய ஐராவதம் என்னும் யானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற நடையை உடைய தேவயானையின் மணவாளனே, பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது தினைப் புனத்தைக் காப்பதற்காக நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடைய
ஊரிலிருந்த, வள்ளியின தோளை அணைந்த
திருத்தணிகைத் தலைவனே, தொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு மலைகளும் கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும் நடுங்கும்படி செலுத்திய வேலனே,
உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே பாசங்களினின்று
இயல்பாகவே நீங்கியவனே தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே.