Thirupugazh Song : திருப்புகழ் பாடல் வரிகள் 295 முலைபுளகம் எழ ( திருத்தணிகை )
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.
பாடல் வரிகள்
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க …… அமுதான
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற …… லணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் …… ப்ரியமேகூர்
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
கவலைகெட நினதன்பு …… பெறுவேனோ
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
அதிரவெடி படஅண்ட …… மிமையோர்கள்
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று …… பொரும்வேலா
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற …… பெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையி லுறைகின்ற …… பெருமாளே.
பாடல் விளக்கம்
மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில்
அணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம் போன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற
மொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த கண்கள் குவிய, நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம்
உள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக் கொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர உருகி,
உள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப அலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை
நான் அடையமாட்டேனோ?
அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட,
தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட, இடை நிலத்தே நின்ற அசுரர்கள் அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று
சண்டை செய்த வேலனே, தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம்
வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரனே, விஷம் கொண்ட ஐந்து தலைகளை
உடைய பாம்பு பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.