Thirupugazh Song 294: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 294 முத்துத் தெறிக்க ( திருத்தணிகை)
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது
பாடல் வரிகள்
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
முட்டத்தொ டுத்த …… மலராலே
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
முற்பட்டெ றிக்கு ……நிலவாலே
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
இப்பொற்கொ டிச்சி …… தளராதே
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
இற்றைத்தி னத்தில் …… வரவேணும்
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
வெற்பைத்தொ ளைத்த …… கதிர்வேலா
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
மிக்குப்ப ணைத்த …… மணிமார்பா
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
சித்தத்தில் வைத்த …… கழலோனே
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
வெட்டித்து ணித்த …… பெருமாளே.
பாடல் விளக்கம்
தன்னுள் இருக்கும் முத்து தெறிக்கும்படியாக முற்றி வளர்ந்த கரும்பை வில்லாகக் கையில் வைத்துள்ள மன்மதன் நன்றாகச் செலுத்திய
மலர்க்கணையாலும், முத்துக்களை
தன்னுள் கொண்டுள்ள அழகிய கடலின் மேற்பரப்பில் உதித்து, தீயைப் போல் சூடாக எதிர்ப்பட்டு வீசும் நிலா ஒளியாலும், கிளி
போலப் பேசும் எந்தப் பெண்களும் இவளைப் பற்றி வசை பேசி அவர்கள் அதிக இன்பம் அடையும் துன்பத்தைத் தான் அணிகின்ற இந்த அழகிய கொடி போன்ற நாயகி தளர்ச்சி அடையாமல், எல்லாத் திசைகளிலும் புகழ் பரந்துள்ள வெற்றியுடன் விளங்கும் இந்தத்
திருத்தணிகைப்பதியில் இன்றைய தினத்தில்
நீ வந்தருள வேண்டும்.
மிகுந்த கோபத்துடன் வடதிசையில் இருந்த சிறந்த சிகரங்களைக் கொண்ட
கிரெளஞ்சமலை தொளைத்துப் பொடியாக்கிய
ஒளிமிகுந்த வேலாயுதனே, புகழ்ச்சி
கூறி, குறத்தி வள்ளியின் மார்பினை விருப்பத்துடன் தழுவி உள்ளம் உருகி, மிகவும் பெருமை அடைந்த மணி மார்பனே, மிகுந்த பித்தரானவரும், அழகிய ஊமத்தம் பூவைச் சடையில் சூடியவருமான சிவபெருமான் தம் மனத்திலே வைத்துப் போற்றும் திருவடிகளை உடையவனே, வட்ட வடிவான அலைகளை வீசும் கடலில் முறித்து அழித்து, எதிர்த்து
வந்தவர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே.