Thirupugazh song 292 : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 292 முகிலும் இரவியும் ( திருத்தணிகை )
அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.
பாடல் வரிகள்
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு
முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு …… மெனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரென
முதலை மடுவினி லதவிய புயலென
முகமு மறுமுக முடையவ னிவனென …… வறியோரைச்
சகல பதவியு முடையவ ரிவரென
தனிய தநுவல விஜயவ னிவனென
தபனன் வலம்வரு கிரிதனை நிகரென …… இசைபாடிச்
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு
மிரவு தவிரவெ யிருபத மடையவெ
சவித அடியவர் தவமதில் வரவருள் …… புரிவாயே
அகில புவனமு மடைவினி லுதவிய
இமய கிரிமயில் குலவரை தநுவென
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த …… அபிராமி
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
னரியொ டயனுல கரியவ னடநவில் …… சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
திரைக ளெறிகடல் சுவறிட களமிசை
திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் …… பெருகாறாச்
சிகர கிரிநெரி படபடை பொருதருள்
திமிர தினகர குருபர இளமயில்
சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் …… பெருமாளே.
பாடல் வரிகள் விளக்கம்
கொடையில் மேகரூம், புகழில் சூரியனும், முக காந்தியில் பேரொளி வீசும் முத்தும், அழகில், கரும்பு வில்லை ஏந்தி விரைவில் பாணங்களை விடும் மன்மதனனும், ஈகையில்,
வேண்டுமளவும் கேட்ட ஒரு பொருளைத் தந்து உதவிய பிள்ளையும் இவன் என்று விரும்பிச் சென்று, பழைய கர்ணனே இவன் என்றும், தெய்வ விருட்சமாகிய கற்பகத்தை ஒப்பானவன் இவன் என்றும், முதலையை மடுவில் கொன்ற மேக நிறம் கொண்ட திருமாலே இவன் என்றும், முகமும் ஆறு முகக் கடவுள் போன்றவன் என்றும், தரித்திரம் கொண்டவரை சகல செல்வங்களும் உடையவர் இவர் என்றும், வில்வித்தையில் வல்லவனான அருச்சுனன் இவன் என்றும், சூரியன் வலம் வருகின்ற மேரு மலையை ஒப்பானவன் என்றும் இசைப்
பாட்டுக்களைப் பாடி,
கல் பிளவை ஒத்த இறுகிய மனம் வாய்ந்த லோபிகளின் இடங்கள் தோறும் நடந்து திரியும்
யாசகத் தொழில் நீங்கவும், உனது இரண்டு பாதங்களை அடையவும் , பல வகையான அடியார்களின் தவ நிலை எனக்கு வருமாறும் அருள் புரிவாயாக.
எல்லா உலகங்களையும் முறைப்படி
தந்தவளும், இமயமலை பெற்ற மயிலுமாகிய உமை, சிறந்த மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு திருவதிகை என்னும் பதியில் திரிபுரத்தை ஒரு நொடிப் பொழுதில் எரித்த அபிராமி தனது இடது பாகத்தில் அமரும்படியாக வாய்த்தவனும், நெருப்பு என்னும் ஒப்பற்ற உருவத்தினன்,
உரைக்கு எட்டாதவன், பழைய தமிழுக்கு உரியவன், திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் செய்பவன் ஆகிய சிவபெருமானின் செல்வனே,
சக்ராயுதங்களுடன் அசுரர்களின் பெரிய முடிகள் பொடிபடவும், அலைகள் வீசும் கடல் வற்றிப் போகவும்,போர்க்களத்தில் மேடான உயர் நிலங்களிலும் புரண்டெழுந்த மிகுதியான இரத்தம் பெருகி ஆறாக ஓடும்படியும், சிகரங்களை உடைய கிரவுஞ்சமலை நெரிபட்டு பொடியாய் விழவும், வேலால் சண்டை செய்து அருளிய, அஞ்ஞான இருளை நீக்கும் ஞானசூரியனே, குருபரனே, இளமை வாய்ந்த மயிலில் பவனி வரும், ஒப்பற்ற
திருத்தணிகையில் நிலைத்து விளங்கும் பெருமாளே.