ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 291 முகத்தை மினுக்கி( திருத்தணிகை )

கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது. பாடல் தலைவனை (முருகனை) பிரிந்த தலைவியின் வருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பாடல் வரிகள்

முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
     விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
          மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் …… விதமாக

முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
     புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
          முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் …… ஒழிவாக

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
     புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
          விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் …… வடிவேலும்

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
     திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
          விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு …… ளருளாயோ

புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
     நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
          பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ …… ளபிராமி

பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
     எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
          பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் …… அமுதாகச்

செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்
     அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
          திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய …… சிறியோனே

செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
     கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
          திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய …… பெருமாளே.

பாடல் விளக்கம்

முகத்தை மினுக்குபவர்கள். முட்டாள்கள். வஞ்சகர்கள். கணகளால் விழித்துப் பார்த்து மருட்டுபவர்கள். கர்வம் கொண்டவர்கள். திருடிகள். பேச்சால் மயக்குபவர்கள். உபாயத்திலும் சிரிப்பிலும் ஒரு வகையாக
செய்வதறியாமல் திகைத்து, மோகம் கொண்ட அறிவில்லாதவன் நான். ஒழுக்கம் இல்லாதவன். புழுக்கள் உள்ள உடலை ஒரு
பொருட்டாக மிகவும் நினைத்து அந்தப் பொது மகளிரைத் தழுவுவதற்காக அடுத்து, திரிகின்ற அடியேனுடைய துன்பங்கள் நீங்க மிகுந்த
அழகைப் பெற்ற ஆறுமுகனே, சரவணனே, உனது திருப்புயங்களில் நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூ மாலையும், மிக
வேகமாகச் செல்லும் உக்ரமான பச்சை நிற மயிலும், கூரிய வேலும் வெளிப்பட்டு என் முன்னே தோன்ற, இரவு, பகல் என்னும் வேற்றுமை அற்று சுத்த அருள் நிலை உற, லக்ஷ்மிகரம் அழுத்தமாகப் பொருந்த, உனது
திருப்புகழை அமுது பொருந்தும் பாடல்களாகப் பாடி, பிரமன் எழுதிய எழுத்து மெலிந்து அழிந்திட, மேம்பட்டுவிளங்கும் ஒப்பற்ற பொருளை உபதேசித்து அருள்வாயாக.

புகை தரும் நெருப்பினால் முப்புரங்கள் எரிபட்டு அழியும்படி சிரித்தவருடைய
இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வலைஞர் மகளாக மீனவப் பெண்ணாகத் தோன்றியவள், மலைகளுள் சிறந்த இமயமலை அரசன் பெற்ற இமயவல்லி , அபிராமி ,அம்பலத்தில் திமித்திமி என நடனம் செய்யும் தேவி, இலக்கணங்கள் அறிந்துள்ள ருத்திரன் தேவி, பகவதி, கெளரி,
ஒழுங்காக சொல்லும் பொருளும் போலச் சிவத்தோடு கலந்திட்டு நிற்பவள், அமுது உருண்டை போல பூமியை வயிற்றில்அடக்கிய
நெடியோனாகிய திருமாலுக்குத் தங்கை,

(காஞ்சியில் காமாட்சி தேவியாக முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்த பர சிவை,
குலச்சிறப்பமைந்தவள், இயல், இசை, நாடகம் என்ற மூன்று வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை அருளிய குழந்தையே,கர்வம் கொண்ட அசுரர்கள்
பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து, தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில் மயில் மீது நடனமிடும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *