ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Thirupugazh Song 290: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 290 மலை முலைச்சியார் (திருத்தணிகை )

கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது.

பாடல் வரிகள்

மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
     மதிமு கத்திய …… ரழகான

மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
     மனது ருக்கிக …… ளணைமீதே

கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு
     கலவி யிற்றுவள் …… பிணிதீராக்

கசட னைக்குண அசட னைப்புகல்
     கதியில் வைப்பது …… மொருநாளே

குலகி ரிக்குல முருவ விட்டமர்
     குலவு சித்திர …… முனைவேலா

குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
     குமர சற்குண …… மயில்வீரா

தலம திற்புக லமர ருற்றிடர்
     தனைய கற்றிய …… அருளாளா

தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
     தணிம லைக்குயர் …… பெருமாளே

பாடல் விளக்கம்

மலை போன்ற மார்பகங்களை உடையவர், கயல் மீன் போன்ற கண்களை உடையவர்,
சந்திரனைப் போன்ற முகம் உடையவர், அழகுள்ள மயில் போன்ற நடையை உடையவர், குயில் போன்ற பேச்சுக்களை உடையவர், மனத்தை உருக்குபவர், படுக்கையின் மீது ஆடையைத் தளர்த்தி உறவுடன் அணைகின்ற சேர்க்கை இன்பத்தில் வாடுதலுறும் குற்றம் உள்ளவனும், குணம் கெட்ட முட்டாளுமான என்னை, சொல்லப்படுகின்ற நற் கதியில் கூட்டி
வைப்பதுமான ஒரு நாள் உண்டோ?

சிறந்த கிரவுஞ்ச மலைக் கூட்டத்தில் ஊடுருவச் செலுத்திப் போர் புரிந்த அழகிய கூரிய வேலாயுதனே குறவர்கள் பெற்ற சிறுமியாகிய வள்ளியைக் கூடிய குமரனே, உத்தம
குணமுள்ள மயில் வீரனே, இந்த பூமியில் உள்ளவர்களால் போற்றப்படும் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிய அருள் நிறைந்தவனே, மரங்கள் வரிசையாக வளர்ந்து ஓங்கும் சோலைகள் மிகுந்த திருத்தணிகை மலையில் மேம்பட்டு விளங்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *