Thirupugazh song 287: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 287 பொற்குடம் ஒத்த(திருத்தணிகை)
கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது. பாடல் தலைவனை (முருகனை) பிரிந்த தலைவியின் வருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
பாடல் வரிகள்
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
கைப்பொருள் புக்கிட …… வேதான்
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய …… ரானோர்
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள் …… பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள் …… வாயே
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி …… யாலக்
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்தத ணிக்கும …… ரேசா
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி …… மேலே
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
லைக்குலை கொத்திய …… வேளே.
பாடல் விளக்கம்
பொன்னாலாகிய குடம் போன்ற மார்பை அசைப்பவர வந்தவர் கையில் உள்ள பொருள் தமக்குக் கிடைத்த பின்தான் பறவைகளின் குரலைக் காட்டி, மாய வித்தைகளை குழறிப் பேசும் பேச்சுக்களை உடையவர்கள், பொட்டு அணிந்த நெற்றியை உடையவர்கள், மெல்லிய இடையில் புடவையைச் சுற்றி அதை காமம் மூட்டும்படி நெகிழ்க்கவும் செய்பவர்கள், அற்பர்கள், அந்த பயனற்றவர்களாகிய பொது மகளிர் இடத்தே போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை
நீங்கச் செய்து அருள் புரிவாயாக.
கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை ஆகிய மேளவாத்தியங்கள் முழங்கும் ஒலி ஒலிக்க, கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தம் பூ இவைகளை சடையில் அணிந்த சிவபெருமானுக்கு, ரகசிய உபதேசத்தை அருளிய திருத்தணிகை மலைக் குமரேசனே, சர்க்கரை, வாழை, மா, பலா ஆகிய
முக்கனிகளுக்கு ஒப்பான பேச்சுக்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்கள் மீது அதிகப் பற்றுள்ள சமர்த்தனே, அரக்கர்களின் தலைக் கொத்துக்களை வெட்டி அழித்த வேளே.