ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Thirupugazh song 286: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 286 பொருவிக் கந்தொடு ( திருத்தணிகை)

கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது. பாடல் தலைவனை (முருகனை) பிரிந்த தலைவியின் வருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

பாடல் வரிகள்

பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
     புதுமைப் புண்டரிகக் …… கணையாலே

புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
     பொழியத் தென்றல்துரக் …… குதலாலே

தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
     திரியத் திங்களுதிப் …… பதனாலே

செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
     தெரிவைக் குன்குரவைத் …… தரவேணும்

அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
     தருமைக் குன்றவருக் …… கெளியோனே

அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
     தயில்கைக் கொண்டதிறற் …… குமரேசா

தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
     தழுவிக் கொண்டபுயத் …… திருமார்பா

தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
     தணிகைச் செங்கழநிப் …… பெருமாளே.

பாடல் விளக்கம்

போர் புரிவதற்கு உரிய மலர்ப் பாணங்களின் கொத்துடன் நெருங்கிச் சண்டை செய்ய
வந்த, கரும்பு வில் ஏந்திய, மன்மதன் செலுத்தும் இந்தப் புதுமை வாய்ந்த தாமரை அம்புகளால், புளகாங்கிதம் கொண்ட மார்பகங்களில் நெகிழ்ச்சி ஏற்பட்ட பூந்தாதுகள் நெருப்பை வீச,
தென்றல் காற்று சோர்வடையச் செய்ய, வீதியில் பெண்கள் மிகுதியாகப் பகை கொண்டு வசைமொழி பேசி சண்டையிடுவதற்காக அங்குமிங்கும் திரிய, நிலா உதித்து எரிக்கும்
செயல் எதுவும் செய்ய முடியாமல், இங்கு படுக்கையில் தூக்கம் இல்லாமல் அச்சத்துடனும் சோர்வுடனும் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உன் குரா மாலையைத் தந்து அருள வேண்டும்.

நீரருவி விழும் வள்ளி மலை முழுவதும் வள்ளி வாழ்ந்திருந்தமையால் புனித நிலமாகப்
போற்றித் திரிந்து செந்தினைப் பயிரை விதைத்திருந்த அருமையான வேடர்களுக்கு மிக எளிமையாக நின்று அசுரர்களுக்கு
அங்குப் பகைவனாய் நின்று, தேவர்களுக்கு உரிய உலகை அவர்களுக்குக் கொடுத்து, வேலாயுதத்தைக் கையில் கொண்ட
வலிமை வாய்ந்த கற்பக மரங்கள் வைத்துள்ள
அமராவதி நகரில் லக்ஷ்மி போல் இருக்கும் தேவயானையை போய்ச் சேர்ந்து தழுவிக் கொண்ட புயங்களைக் கொண்ட அழகிய மார்பனே, முத்தும், சங்குகளும் வயல்களில்
கூட்டமாகக் கிடக்கும் திருத்தணிகையில் வீற்றிருந்து செங்கழுநீர் மலரைப் புனையும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *