Thirupugazh Song 285: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 285 பொரியப் பொரிய (திருத்தணிகை)
கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது.
பாடல் வரிகள்
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
துகளிற் புதையத் …… தனமீதே
புரளப் புரளக் கறுவித் தறுகட்
பொருவிற் சுறவக் …… கொடிவேள்தோள்
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
செயலற் றனள்கற் …… பழியாதே
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
தெரிவைக் குணர்வைத் …… தரவேணும்
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
சுரருக் குரிமைப் …… புரிவோனே
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
சுருதிப் பொருளைப் …… பகர்வோனே
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
தனிநெட் டயிலைத் …… தொடும்வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் …… பெருமாளே.
மேலும் படிக்க : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 284 பெருக்க உபாயம் ( திருத்தணிகை )
பாடல் விளக்கம்
காமத்தீயால் மேலும் மேலும் பொரிக்கப்பட்டு விளங்கும் முத்து மாலை தூள்பட்டுப் புதைபடும் அந்த மார்பகங்களின் மேல், இப்பெண் படுக்கையில் புரண்டுப் புரண்டு வேதனைப்படுமாறு அவள் மீது கோபம் கொண்டு கொடுமையுடன் போர் செய்யும் கரும்பு வில்லையும், சுறா மீன் கொடியையும் உடைய மன்மதனின் கை தெரிந்து குறிபார்த்துச்
செலுத்தும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், வம்பு பேசும் மகளிர்களுக்கும், ஒலிக்கும் கடலுக்கும் மனம் உருகினவளாய், செய்ய வேண்டிய செயல்கள் அற்றவளான இவளுடைய கற்பு அழியாதவாறு,
நீ இவளுடன் நெருங்கி படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான மாதுக்கு மயக்கத்தை நீக்கி நல்லுணர்வைத் தர வேண்டும். சொரியும் மலர்களை உடைய கற்பக மரங்கள் உள்ள அமராவதி நகரை, தொழுகின்ற கைகளுடன் நின்ற தேவர்களுக்கு
உரிமையாகும்படி உதவியவனே,
ஒளி வீசும் அழகிய கயிலை மலைக் கடவுளாகிய சிவ பெருமானுக்கு, உள்ளம் உவந்து பொருந்தும்படி வேதப் பொருளை
உபதேசம் செய்தவனே, நிலை கெட்டு அசுரர்களுடைய சேனைகள் அழிந்து தொலையும்படி, ஒப்பற்ற நெடிய வேலைச்
செலுத்திய வீரன வெண்மையான சங்குகளும் முத்துக்களும் கிடக்கும் வயல்கள் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே
மேலும் படிக்க : திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 283 பூசலிட்டு (திருத்தணிகை)