Thirupugazh song 277: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 277 கூர்வேல் பழித்த (திருத்தணிகை)
அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட இறை நூலான திருப்புகழ் ஒவ்வொரு பாடலிலும் அறுபடை வீடுகளைக் கொண்ட முருகனின் வீரம், பெருமை,புகழ், காதல், கருணை ஆகியவற்றை நமக்கு விளக்கிக் கூறுகிறது.திருப்புகழை நாம் படிப்பது என்பது நமக்கு கிடைத்த பாக்கியமே..
பாடல் வரிகள்
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல …… ரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை …… யுடைநாணக்
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ …… விளையாடுங்
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானூ ருறைக்கலக …… மொழியாதோ
வீரா ணம்வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் …… கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி …… லுறைவோனே
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் …… குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டணைத்துமகிழ் …… பெருமாளே.
பாடல் விளக்கம்
கூர்மையான வேலாயுதத்தைப் பழித்து வென்ற கண்களாலே வருபவரை மயக்குவித்து, மலை போன்ற மார்பால் வரவழைத்து, மலர்ப் படுக்கை மேல தம்பலப் பூச்சி போலச் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும்படி மார்புறத் தழுவி, கண்ணை அம்பு போலச் சுழற்றி,
இடையில் உள்ள ஆடை நெகிழவும், மேகம் போல் கருப்பான கூந்தல் சரியவும்,
வாய் அதட்டும் சொற்களைப் பேசவும், இரண்டு காதுகளில் உள்ள ஓலைகளும் கழன்று விழவும், லீலைகளைச் செய்து காம மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மகளிருடன் மகிழ்வுற்று, யமனுடைய நரகில் சேர்ந்து இருக்கும்படியான குழப்பம் என்னை விட்டு அகலாதோ?
வீராணம் என்னும் பெரிய பறை, வெற்றி முரசாகிய ஜய பேரிகை, மேள வகை, திமிலை என்ற பறை, வேதாகம ஒலிகள் இவையெல்லாம்
கடல் போல மிக்க சிறப்புடன் முழக்கம் செய்ய,எதிர்த்து வந்த சூரர்கள் இறக்கும்படி செலுத்திய வேலாயுதனே, திருத்தணிகைப் பதியில் வீற்றிருப்பவனே,
மன்மதன் இறக்கும்படி சிரித்த தந்தையின் காதுகளில் சிறந்த ஞானோபதேசத்தை அருளிய குரு நாதனே, திருமால் பெற்ற வள்ளி அம்மை மிக்க மகிழ்ச்சிகொள்ள, அதிக ஆசையுடன்
அவளை அணைத்து மகிழ்ந்த பெருமாளே.