ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Thirupugazh song 275: திருப்புகழ் பாடல் வரிகள் 275 தொக்கறாக் குடில் ( திருத்தணிகை)

முருகப்பெருமானின் மீது பற்று கொண்ட பக்தர்கள் அவரைப் புகழ்ந்து பாட உதவும் இறை நூலாகவும், கந்தனின் பெருமைகளையும், வீர செயல்களையும் மக்கள் அறிய உதவும் பக்தி நூலாகவும் விளங்குகிறது திருப்புகழ். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை படிக்கும் ஒவ்வொரு பாடலிலும் முருகனின் பெருமைகளையும் அவரின் திருவருளையும் நாம் முழுமையாக பெற முடியும்.

பாடல் வரிகள்

தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
     துக்கமாற் கடமு …… மலமாயை

துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
     துப்பிலாப் பலச …… மயநூலைக்

கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
     லப்புலாற் றசைகு …… ருதியாலே

கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
     சட்டவாக் கழிவ …… தொருநாளே

அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
     அர்ச்சியாத் தொழுமு …… நிவனாய

அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
     வெற்பபார்ப் பதிந …… திகுமாரா

இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
     வத்தினோர்க் குதவு …… மிளையோனே

எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
     டெத்தினார்க் கெளிய …… பெருமாளே.

பாடல் விளக்கம்

தோல் நீங்காத குடிசையும், அழுக்கைக் கொண்டதும், சுகம், துக்கம், ஆசை இவற்றைத் தன்னுள் கொண்ட குடமும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலம் என்றிவை நெருக்கமாய் வைத்த காற்றடைத்த பானையும், மிழற்றும் மழலை போன்று பொருள் விளங்காத வார்த்தைகள் உள்ள பல சமய நூல்களை கைக்கொண்டு வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை,

துன்பத்துக்கு இடமான மாமிச பிண்டம், சதை, ரத்தம், இவற்றால் கட்டப்பட்ட கலப்பும் மிக
வெறுக்கத்தக்க பொருளானதுமான இந்த உடம்பை விரும்பித் திரிகிற எனக்கு, அடியோடு வாக்கு அழிந்து போகும் மெளனநிலை கூடும் ஒருநாள் ஏற்படுமோ?

எலும்புகள், பாம்புகள், திருநீறு, இவற்றைத் தம் உடம்பில் அணிந்துள்ள நம் தந்தையான சிவபிரான் மலர்களால் அர்ச்சித்துத் தொழுத ஞானியான அப்பனே, போருக்கு எப்போதும் ஆயத்தமாய் உள்ள பன்னிரண்டு மலைகள் போன்ற புயத்தோனே, குவளை மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையோனே, பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே, இந்தப் பூமியில்
பார்வை என்று ஒன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப் பார்க்கும் பார்வையே. அந்தப் பார்வையை உடைய தவசீலர்களுக்கு
உதவும் இளையவனே,

உன்னை வணங்காதவர்களுக்கு அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே, தமிழ்ப்
பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *