ஆன்மிகம்ஆலோசனை

Thirupugazh song : திருப்புகழ் பாடல் வரிகள் 273 திருட்டு நாரிகள் (திருத்தணிகை)

அருணகிரிநாதர் கந்தப்பெருமானின் பெருமைகளை தெளிவாக நாம் தெரிந்து கொள்ளும் வகையில் நமக்காக அருளிய நூலே திருப்புகழ் ஆகும்.இந்த அறிய நூலை நாம் படிக்கும் ஒவ்வொரு வரிகளிலும் இறைவனின் அருளை முழுவதுமாக பெறுகிறோம்.

பாடல் வரிகள்

திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
     வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
          சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் …… வலையாலே

திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்
     இதத்தை யோடவி டுத்தும யக்கிடு
          சிமிட்டு காமவி தத்திலு முட்பட …… அலைவேனோ

தரித்து நீறுபி தற்றிடு பித்தனு
     மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு
          சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு …… முருகோனே

சமப்ர வீணம தித்திடு புத்தியில்
     இரக்க மாய்வரு தற்பர சிற்பர
          சகத்ர யோகவி தக்ஷண தெக்ஷிண …… குருநாதா

வெருட்டு சூரனை வெட்டிர ணப்பெலி
     களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர்
          விடுத்த கூளிகள் தித்திகு தித்தென …… விளையாட

விதித்த வீரச மர்க்கள ரத்தமு
     மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில்
          விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய …… மறவோனே

பெருக்க மோடுச ரித்திடு மச்சமு
     முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு
          பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் …… கழுநீரின்

பிணித்த போதுவெ டித்துர சத்துளி
     கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி
          பிறக்க மேவுற அத்தல முற்றுறை …… பெருமாளே.

பாடல் விளக்கம்

திருட்டுப் பெண்கள், கூத்தாடும் உதவாக் கரைகள், பசையற்ற செருக்குடன்
தினந்தோறும் நடிப்பவர்கள், சிறப்புடன் உடலைக் குலுக்கி, அங்குமிங்கும் திருப்பும்
கண்கள் வீசும் வலையால் ஆண்களைத் திகைப்பித்து,உள்ளிருக்கும் உயிரைக் கரைத்து, மனதில் இன்பத்தை ஓட விடுமாறு செய்து மயக்கத்தைத் தருகின்ற கண்களைக் கொட்டுகின்ற காம வழியில் சிக்கும்படி அல்லாடுவேனோ? திருநீற்றை அணிந்து,
மறை மொழிகளைப் பிதற்றுகின்ற பித்தனாகிய சிவபெருமானும் இன்பத்துடன் பெரிய
பிரணவப் பொருளை உபதேசிப்பாயாக, சமர்த்தனாகிய குழந்தையே என்று உன்னைக் கேட்கும்படியான புகழைப் பெற்ற முருகனே பெரும் நிபுணனே, போற்றுகின்ற அடியார்களின் புத்தியில் இரக்கத்துடன் எழுந்தருளும் பரம் பொருளே, அறிவுக்கு
எட்டாத கடவுளே,

பல யோகங்களுள் சிறப்புள்ள மெளன யோகநிலையைக் கொண்ட தக்ஷிணா மூர்த்தியான குரு நாதனே, தேவர்களை விரட்டிய சூரனை சம்ஹாரம் செய்து, போரில் கொல்லப்பட்ட இடங்களில் பேய்களுக்குப்
பிணங்களைஇரையாகக் கொடுத்து, அவற்றின் பசித் துன்பம் நீங்கி அப்பேய்கள் தித்திகு தித்து என்று குதித்து விளையாடும் படிச் செய்த வீரனே, போர்க் களத்தில் ரத்தமும் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓடும்படியாக அசுரர்களை ஒழித்து, வேலாயுதத்தைப் பாய்ச்சி lஅவர்களின் உயிரை உண்ட வீரனே,

நிறைந்த வளர்ச்சியோடு வசிக்கின்ற மீன்கள் தமது மனதில் மிகுந்த மகிழ்ச்சி பெறும்படியாக,
அவற்றின் குறுகிய, ஆனால் பிளந்திருக்கும், வாய்களில் மூன்று வேளைகளிலும், ஒப்பற்ற செங்குவளையின் கட்டுள்ள மலர்கள் இதழ்
விரிந்து ரசத் துளிகளைக் கொடுக்கும் சுனைகள் மிகுந்துள்ள திருத்தணிகையில்
விளக்கம் பொருந்த அந்தத் தலத்தை விரும்பி அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *