ஆன்மிகம்ஆலோசனை

Thirupugazh song 271: திருப்புகழ் பாடல் வரிகள் 271 சொரியும் முகிலை (திருத்தணிகை)

முருகப் பெருமானின் பெருமைகளை தெளிவாக எடுத்துக் கூறும் நூலாக திருப்புகழ் பாடல் வரிகள் உள்ளது. இந்த அறிய நூலை படிக்கும் வாய்ப்பை நமக்கு தந்தது முருகப்பெருமானின் மீது பற்று கொண்ட பக்தரான அருணகிரிநாதர்.

பாடல் வரிகள்

சொரியு முகிலைப் பதும நிதியைச்
     சுரபி தருவைச் …… சமமாகச்

சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
     சுமட ரருகுற் …… றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்
     திருடி நெருடிக் …… கவிபாடித்

திரியு மருள்விட் டுனது குவளைச்
     சிகரி பகரப் …… பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்
     கடையில் விடமெத் …… தியநீலக்

கடிய கணைபட் டுருவ வெருவிக்
     கலைகள் பலபட் …… டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்
     குபய சரணத் …… தினில்வீழா

உழையின் மகளைத் தழுவ மயலுற்
     றுருகு முருகப் …… பெருமாளே.

. பாடல் விளக்கம்

மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் கொடையில் நீ ஒப்பாய் என்று
சொல்லிப் புகழ்ந்தாலும் மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று, இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும்
பாடல்களைப் பாடி, திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின்
பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ?

வள்ளியின் கரிய புருவம் என்னும் வில் காம வேதனையால் வளைந்து சுருங்க,காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும் விஷம்
நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து, மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து , அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப்பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *