Thirupugazh song 270 : திருப்புகழ் பாடல் 270 சினத் திலத் தினை (திருத்தணிகை)
முருகப் பெருமானின் பெருமைகளை தெளிவாக எடுத்துக் கூறும் நூலாக திருப்புகழ் உள்ளது.இத்தகைய அறிய வாய்ப்பை நமக்கு தந்தது அருணகிரிநாதர்.
பாடல் வரிகள்
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல …… வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ …… தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர …… மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் …… புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு …… தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி …… கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை …… பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள் …… பெருமாளே.
.பாடல் விளக்கம்
சிறிய எள்ளு,தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை? அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து
சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை?அவையெல்லாம் போதாவென்று மலைகளிலும் சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை? பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை? யமன் பல பல
பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை?
மனத்திலேதான் எத்தனை வஞ்சகமான எண்ணங்கள்? வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின் குடிகள்தாம் எத்தனை? கொடிய மிருகம்போல் மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை? இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது. விதி வகுத்த
வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை? கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை, முரட்டுக்குணம் உடைய என்னை, மூடர்கள் குலத்தனான என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை, உன்
மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக.
ஓசையோடு கூடிய சந்தத்தில் தமக்கே உரிய
வெற்றி ஒலியோடு மத்தளமும், தமருகம் என்ற முரசும் கடல் அலை ஓசை போல ஆர்ப்பரிக்கவும், கோபம் பொங்கும் போர்க்களத்தில் இரத்தம் கொப்பளித்திடவும், போரில் யானைகளும், அசுரர்களும், குதிரைகளும், விற்களும் தெறித்து சின்னாபின்னமாக விழுந்திடவும், கழுகும் நரியும் பிணங்களைத் தின்ன, மாமிச மலை மீது நின்று சூரனோடு போர் செய்த வேலனே,
மனவளம் மிக்க உத்தமர்களான சிவனடியார்களும், தவமுநிவர் கூட்டங்களும் தேன் நிறைந்த மலர்களைக் கொண்டு
பணிகின்ற திருத்தணிகை என்ற திருப்பதியிலே
வீற்றிருக்கும் குறப்பெண் வள்ளியின் மணவாளப் பெருமாளே.