Thirupugazh Song: திருப்புகழ் பாடல் 269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முருகப்பெருமானின் புகழை போற்றி பாடும் நூலாகவும், பக்தர்கள் மனமுருக வேண்டி வணங்கும் இறைநூலாகவும் உள்ளது. திருப்புகழை நாம் படிக்கும் ஒவ்வொரு பாடல்களிலும் முருகப்பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
பாடல் வரிகள்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் …… தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் …… கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.
.பாடல் விளக்கம்
முருகன் அடியார்களை கோபிப்பவர்களது
தலைக்கும்,அவர்களைப் பகை செய்தவர்களது
குடும்பத்திற்கும், அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும், அவர்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்களுக்கும், அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,திருப்புகழே நெருப்பாகி அடியோடு அழிக்குமென நாங்கள் நன்றாக அறிவோம்.
அடியார்களாகிய நாங்கள் எதை நினைத்தாலும்
அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும், பாடுவோர், கேட்போரின் மனதையும்
உருக்குவதும், மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம் இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை
அறுப்பதும்,அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும், மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.
அதே ஒலியுடன் பேரிகைகள் முழங்கவும்,அதே ஒலியுடன் உடுக்கைகள் முழங்கவும்,சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த கொடிய சூராதி அசுரர்களின் கோபத்தையும்,அறுத்தெறிந்த பிணமலைகள் யாவையும், புன்னகை புரிந்தே அதிலெழுந்த அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே, தினைப்பயிர் விளையும் மலைக்
குறவள்ளியை மார்புற அணைத்து இன்புற்று, உயர்ந்தோர் மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.