ஆன்மிகம்

திருப்புகழ் பாடல் விநாயகர் துதி 2

இறையருள் பெறுவது என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும் அதுவும் முருகன் அருள் பெற தினம் ஒரு திருபுகழ் படிப்பது சிறந்தது ஆகும். திருப்புகழ் விநாயகர் துதி 2 நாம் பாடுகையில் பொருள் புரிந்து உள் வாங்கும் பொழுது வாழ்வு வளம் பெறும்

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப …… னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய பெருமாளே.

அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே.

 திருவண்ணாமலையில் ‘முத்தைத்தரு’ என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற ‘செய்ப்பதி’க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.

 மேருமலையில் முன்னர் ‘வியாசர்’ விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு ‘ஏகதந்தன்’ (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *