ஆன்மிகம்

திருப்புகழ் 11 கனகந்திரள்கின்ற (திருப்பரங்குன்றம்)

அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை படித்தால் குடும்பம் விறுத்தி அடையும்

தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

பாடல் வரிகள்:

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
     தனில்வந்துத கன்தகன் என்றிடு
          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு …… கதியோனே

கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
          கரியின்றுணை என்றுபி றந்திடு …… முருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனை
     கடல்முன்புக டைந்தப ரம்பரர்
          படரும்புயல் என்றவர் அன்புகொள் …… மருகோனே

பலதுன்பம்உழன்றுக லங்கிய
     சிறியன்புலை யன்கொலை யன்புரி
          பவமின்றுக ழிந்திட வந்தருள் …… புரிவாயே

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
     புரமுந்திரி வென்றிட இன்புடன்
          அழலுந்தந குந்திறல் கொண்டவர் …… புதல்வோனே

அடல்வந்துமு ழங்கியி டும்பறை
     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட …… வருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்
     உடலுங்குட லுங்கிழி கொண்டிட
          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன …… பெரியோனே

மதியுங்கதி ருந்தட வும்படி
     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் …… பெருமாளே.

சொல் விளக்கம்:

கனகந்திரள்கின்ற பெருங்கிரி … தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய
மேரு மலையை

தனில்வந்து தகன்தகன் என்றிடு … அடைந்து அதன் மேல் தக தக
என்று மின்னுகின்ற

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு … ஒளிவீசும் செண்டாயுதத்தை
(பொற்பிரம்பை)* எறிந்திட்ட

கதியோனே … புகலிடமானவனே,

கடமிஞ்சி அநந்தவிதம் புணர் … மிக்க மதம் கொண்டு, பலவித
பக்ஷணங்களைப் புசித்து,

கவளந்தனை உண்டு வளர்ந்திடு … அனைத்தையும் கவள அளவாக
உண்டு வளர்ந்த

கரியின்றுணை என்றுபிறந்திடு முருகோனே … யானைமுகனுக்கு
இளையவனாகப் பிறந்த முருகனே,

பனகந்துயில்கின்ற திறம்புனை … ஆதிசேஷன் மீது அறிதுயில்
கொள்ளும் வல்லமை உடையவரும்,

கடல்முன்பு கடைந்த பரம்பரர் … பாற்கடலை முன்பு
(கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும்,

படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே … வானில்
படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே,

பலதுன்பம் உழன்று கலங்கிய … பல துன்பங்களால் மனம் சுழன்று
கலக்கமுற்ற

சிறியன்புலையன் கொலையன் … அற்பனும், புலால் உண்பவனும்,
கொலைகாரனுமான நான்

புரி பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே … செய்கின்ற
பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி
திருவருள் புரியவேண்டும்.

அனகன்பெயர் நின்று … பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து
நின்று,

உருளுந்திரி புரமுந்திரி வென்றிட … எப்போதும் சுழன்று திரியும்
திரிபுரத்தையும் வெற்றி கொள்ள,

இன்புடன் அழலுந்த … அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக்
கொள்ளும்படியாக

நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே … சிரித்தே எரித்த
திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே,

அடல்வந்து முழங்கியிடும்பறை … வலிமையோடு வந்து முழங்கும்
பறை வாத்தியங்கள்

டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென … (அதே ஒலியோடு)

அதிர்கின்றிட அண்டநெரிந்திட … உலகம் அதிர, அண்டங்கள்
கூட்டமிகுதியால் நெரிய,

வருசூரர் மனமும் தழல் சென்றிட … போருக்கு வந்த சூரர்களின்
மனத்தில் சென்று அக்கினி சுடும்படி,

அன்றவர் உடலுங் குடலுங் கிழி கொண்டிட … அந்த நாள்
அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி,

மயில்வென்றனில் வந்தருளும் … மயிலின் முதுகின் மேல் வந்தருளிய

கன பெரியோனே … மதிப்பும் பெருமையும் உடையவனே,

மதியுங்கதிருந் தடவும்படி … சந்திரனும் சூரியனும் தடவிச்
செல்லும்படியான

உயர்கின்ற வனங்கள் பொருந்திய … உயரமான மரங்கள் உள்ள
சோலைகள் நிறைந்த

வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே. … வளமிக்க
திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *