ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Thirupugazh Song 281: திருப்புகழ் பாடல் வரிகள் விளக்கம் 281 பழமை செப்பிய (திருத்தணிகை )

கந்தனின் திருவருளை நாம் முழுமையாக பெறவும் அவரின் வரலாற்றின் பெருமைகளை பக்தர்களாகிய நாம் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட அறிய நூலே திருப்புகழ். அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ் உலகப் புகழ்பெற்ற இறைநூலாக அனைவராலும் போற்றக்கூடிய நூலாக உள்ளது.

பாடல் வரிகள்

பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
     முறைம சக்கிய ணைத்துந கக்குறி
          படஅ ழுத்திமு கத்தைமு கத்துற …… வுறவாடிப்

பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
     விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
          பலவி தத்திலு மற்பரெ னச்சொலு …… மடமாதர்

அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
     அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
          அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை …… அடியேனை

அகில சத்தியு மெட்டுறு சித்தியு
     மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
          மருண பொற்பத முற்றிட வைப்பது …… மொருநாளே

குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
     கரண மிட்டுந டித்தமி தப்படு
          குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு …… மொருசூரன்

குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
     நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
          குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித …… மயில்வீரா

தழையு டுத்தகு றத்திப தத்துணை
     வருடி வட்டமு கத்தில தக்குறி
          தடவி வெற்றிக தித்தமு லைக்குவ …… டதன்மீதே

தரள பொற்பணி கச்சுவி சித்திரு
     குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
          தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் …… பெருமாளே.

பாடல் விளக்கம்

பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்து, இன்பமும் பொய்யும் கலந்து முறையே மயங்கச் செய்து அணைத்து, நகக்குறி உடலில் பட அழுத்தி, முகத்தை முகத்தோடு வைத்து உறவாடி, அவசரமாக எச்சில் கூடிய மருந்தை ஊட்டி, வஞ்சகம் கலந்த தந்திரச் செயல்களைச் செய்பவர்கள், பல வகைகளிலும் அற்பர் என்று சொல்லத் தக்க அறிவில்லாத விலை மாதர்களுடன் அழிந்து போகும் தொழில்களில் விருப்பத்துடன் ஆசைப்படும் முட்டாளை, பழிக்கு ஆளான வீணனை, தகுதி இல்லாத
பொய்யனை, மூடனாகிய அடியேனை சகல சக்தியும், அஷ்டமா சித்திகளும் எளிதில்
கிட்டும்படி, பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது சிவந்த அழகிய திருவடிகளை நான் சேரும்படியாக வைக்கும் ஒரு நாள் எனக்குக்
கிடைக்குமா?

குழிந்த விழிகளைக் கொண்ட, பெரிது நீண்ட பேய்க் கூட்டங்கள் கூத்துடன் நடனமாடி, அளவில்லாத வீராவேச ஒலி செய்த போர்க் களத்தில், எதிர்த்து வந்த ஒப்பற்ற சூரன் ரத்தத்தைக் கக்கி அதிர்ச்சியுடன் விழும்படி போர் செய்தும், அசுரர் சேனைகள் பொடிபட்டு அழியவும், இந்திரனது வலிமை பொருந்திய வஜ்ராயுதம் போன்ற வேலாயுதத்தைச் செலுத்திய தீரனே, பேரொலி செய்யும் மயில் வீரனே, தழைகளை உடையாகக் கொண்ட குறவள்ளியின் திருவடிகள் இரண்டை வருடியும், வட்டமாக உள்ள முகத்தில் பொட்டு
அடையாளத்தை வைத்தும், வெளித்தோன்றும் மலை போன்ற மார்பகங்களின் மேல முத்தாலாகிய அழகிய ஆபரணங்களை, கச்சை
அணிவித்தும், இரண்டு குண்டலங்களையும் செவிகளில் இடம் பெற வைத்தும், காதல் பெருகும் பெருமாளே, தணிகை மலை உச்சியில்
வீற்றிருக்கும் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *