திருப்புகழ் சுவாமிமலை பாடலில் 215 கோமள வெற்பினை
திருப்புகழ் பாடல் சுவாமிமலை 215 பாடலில் கோமள வெற்பினையில் முருகன் பெருமை கூறுகிறது. பேச்சு, நடை உடை, பாவனையில் நம்மை மயக்கும் மகளிரை விடுத்து சூரனை கொன்று, அசுரர் குலம் காத்த வேலவனே, பார்வதியின் புதல்வனே என முருகனை எண்ணி பாடுகின்றது.
கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் …… மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல் கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் …… விரகாலே தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர் யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் …… நெறிகூடா தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர் காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைப டித்துந டிப்பவ …… ருறவாமோ மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக …… கதிர்காம மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் …… அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள் ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு …… ளிளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் …… பெருமாளே. விளக்கம் கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள் கோவை இதழ்க் கனி நித்தமும் விற்பவர் … அழகிய மலை போன்ற மார்பகங்களை உடையவர். காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர். மனத்தை உருக்குபவர்கள். கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை தினந்தோறும் விற்பவர்கள். மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப் புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டு மருட்டிகள் … மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகிய விழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள். விரகாலே தூம மலர்ப் ப(ள்)ளி மெத்தை படுப்பவர் யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர் சோலை வனக் கிளி ஒத்த மொழிச்சியர் … தந்திரத்துடன் நறும் அகில் மணம் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர்கள். எவரையும் ஏமாற்றி வீட்டுக்குள் அழைப்பவர்கள். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர்கள். நெறி கூடா தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள் தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ … நன்னெறி பொருந்தாத வகையில் (தமது) ஆடையைத் தளர்த்தி பிறகு இடுப்பில் சுற்றியும் உடுப்பவர். தம்மிடம் வருவோர் பொருளை அபகரிக்க (பல விதத்தில்) இடையிலே விழுந்து சேர்பவர்கள். வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில் குக … மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே, கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில் தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில் … கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும், ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே … இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே, ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி மெச்சிய சித்த … திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே, மேலும் படிக்க : திருப்புகழ் சுவாமிமலை பாடல் 210 கதிரவனெ ழுந்து இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே. … ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே. |
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே. … ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே. |