ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 210 கதிரவனெ ழுந்து

திருப்புகழ் பாடல் ம 210 இல் நாம் கண்டு மகிழ பல இருப்பினும் , நாம் கொண்டாடி மகிழ நினைப்பது நியே சுவாமிமலை முருகா என இறைவனை எண்ணி பாடும் பாடலாக அமைந்துள்ளது.

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
     கடலளவு கண்டு மாய …… மருளாலே

கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
     கவினறந டந்து தேயும் …… வகையேபோய்

இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
     மிடமிடமி தென்று சோர்வு …… படையாதே

இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
     லிரவுபகல் சென்று வாடி …… யுழல்வேனோ

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
     மலர்வளநி றைந்த பாளை …… மலரூடே

வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
     மதிநிழலி டுஞ்சு வாமி …… மலைவாழ்வே

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
     அணிமயில்வி ரும்பி யேறு …… மிளையோனே

அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
     அருள்புதல்வ அண்ட ராஜர் …… பெருமாளே.

விளக்கம்

கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல்
அளவு கண்டு மாய மருளாலே
 … சூரியன் உதித்துச் செல்லும்
எல்லை அளவைச் சென்று கண்டும், மோதும் அலைகளை உடைய
கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், உலக மாயை என்னும்
மயக்கத்தால்,

கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின்
அற நடந்து தேயும் வகையே போய்
 … கூட்டமான படங்களை
உடைய பாம்பு அரசனாகிய ஆதிசேஷனின் எல்லை அளவைப்
போய்க் கண்டும், கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய
நடந்து தேயுமாறு அங்கங்கே சென்று,

இதம் இதம் இது என்று நாளு(ம்) மருக அருகிருந்து கூடும் இடம்
இடம் இது என்று சோர்வு படையாதே
 … இது நல்ல இடம் என்று
எண்ணி லோபிகளுடைய சமீபத்தில் அணுகிச் சேர்ந்து, இதுதான்
சரியான இடம் என்று எண்ணி மனத் தளர்ச்சி கொள்ளாமல்,

இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல் இரவு
பகல் சென்று வாடி உழல்வேனோ
 … இசைப் பாட்டுக்களாலும்
உரையாலும் புகழ்ந்து நின்ற போது, அந்த இடத்தை விட்டு வெளியே
நழுவும் பெரிய பிரமுகர்களின் வீட்டு வாசலில் இரவும் பகலும் சென்று
நான் வாடித் திரியலாமோ?

மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள
நிறைந்த பாளை மலரூடே
 … வண்டுகள் நிறைந்து வாசனை வீசும்
தேனை உண்டு, கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை
மலர்களின் இடையே

வகை வகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட … இனம்
இனமாக எழுந்து சாமம் என்னும் சிறந்த வேதத்தை வியக்கத்தக்க
முறையில் பாட,

மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே … சந்திரனின்
தண்மையைத் தரும் சுவாமிமலையாகிய திருவேரகத்தில் வாழும்
செல்வமே,

அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில்
விரும்பி ஏறும் இளையோனே
 … உலகம் எல்லாம் திர்ச்சி கொள்ள
வீசுகின்ற பெருங்காற்று என்று சொல்லும்படியாக வருகின்ற, நீல
நிறங்கொண்ட தோகையை உடைய, அழகான மயிலில் விரும்பி
ஏறும் இளையவனே,

மேலும் படிக்க : திருப்புகழ் சுவாமிமலை 209 கடிமா மலர்க்குள்

அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை
அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே.
 … முறையாக எல்லா
உலகங்களையும் படைத்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்த பார்வதி
தேவி அருளிய மகனே, தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *