திருப்புகழ் 208 கடாவினிடை பாடல்
திருப்புகழ் பாடல் 208 இல் எருமை வாகனத்தில் பயணம் செய்யும் எமதர்மனின் பார்வையிலிருந்து தப்பித்து ,கொடிய பல சிக்கல்களில் இருந்து விலகி, அடியேன் உம்மை துதித்து வாழ 5 புலன்களை அடக்க வல்ல சுவாமி மலை பெருமானே என்று இப்பாடல் சரணாகதி விளக்குகின்றது
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் …… சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் …… கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் …… கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் …… படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் …… பெருவாழ்வே விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் …… கெறிவோனே தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ் சுவாசமது தானைம் …… புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் …… பெருமாளே. ……… விளக்கம்……… கடாவினிடை வீரங் கெடாமல் … எருமைக்கடா வாகனத்தின் மேல் தனது வீரம் குன்றாமல் இனிது ஏறுங் கடாவின் நிகராகுஞ் சமனாரும் … விரும்பி ஏறும், கடாவைப் போன்ற முரட்டு யமனும் கடாவிவிடு தூதன் … கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன் கெடாதவழி போலும் … தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப் பற்றுதல் போலும், கனாவில் விளையாடுங் கதைபோலும் … கனவில் தோன்றிய விளையாட்டு விழித்தால் மறப்பது போலும், இடாதுபல தேடுங் கிராதர்பொருள்போல் … கொடுக்காமல் பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும், இங்கிராமல் உயிர் கோலிங்கு … இவ்வுலகில் நிலைத்து நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற இதமாகும் இதாம் என … சுகம்தான் இந்த வாழ்க்கையென்று உணர்ந்து, இரு போதுஞ் சதா இன்மொழியால் … காலையும் மாலையும் மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் … இன்று அடியேனும் உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய். விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் … எந்நாளும் விடாமல் நடனத்தை காளியுடன் ஆடுகின்ற வியாகரண ஈசன்பெருவாழ்வே … நாட்டிய இலக்கண நிபுணனாம் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே, விகாரமுறு சூரன் … மாறுபட்ட குணமுடைய சூரனின் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற … பகட்டான வாழ்வும் உயிரும் அழியும்படியாக வேல் அங்கு எறிவோனே … அவ்விடத்தில் வேலாயுதத்தை விடுத்தவனே, தொடாதுநெடு தூரந் தடாது … தொட முடியாத காற்றாகவும், நெடுந்தூரம் தடைபடாமல் மிக வோடுஞ் சுவாசமதுதான் … விடாமல் ஓடுகின்றதுமான பிராணவாயுவையும், ஐம்புலனோடுஞ் சுபானமுறு … ஐந்து புலன்களையும் நன்றாக யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல ஞானந் தபோதனர்கள் சேரும் … ஞானத் தவசிகள் கூடுகின்ற சுவாமிமலை வாழும் பெருமாளே. … சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே. |