ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் சுவாமிமலை பாடல் 207 ஒருவரையும் ஒருவர்

திருப்புகழ் சுவாமிமலை பாடலை நாம் பக்தியுடன் படிக்க வேண்டும். ஒருவரையுமொருவமாறி வினைகளை போக்கி வாழ வேண்டும். முருகர் அருள் பெற வேண்டுமெனில் வாழ வேண்டும்.

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
     திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
          துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் …… சனையாலே

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
     கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
          தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் …… திடுவேனைக்

கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
     செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
          கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் …… டருமாமென்

கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
     தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
          கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் …… தெனையாள்வாய்

திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
     தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
          திகழருண கிரிசொருப னாதி யந்தமங் …… கறியாத

சிவயநம நமசிவய கார ணன்சுரந்
     தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
          திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் …… புதல்வோனே

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
     புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
          குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் …… திடுவோனே

குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
     பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
          குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் …… பெருமாளே.

விளக்கம்

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து … ஒருவர் போவது
ஒருவருக்குத் தெரியாதவண்ணம் (பொது மகளிர் வீட்டைத் தேடித்)
திரிந்து,

இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்து நொந்து …
நல்வினை தீவினை என்னும் இரு வினை காரணமாய்த் துன்பமும்
கலக்கமும் அடைந்து, மனம் வேதனைப்பட்டு,

உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய்
வஞ்சனையாலே
 … தீ அடுப்பில் இட்ட மெழுகுபோல வாட்டமுற்று,
முற்பிறப்பில் செய்த வஞ்சனைகளின் பயனாக,

ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் … பெருமையுடன்
விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியிருக்கும்

கயிறு விதம் என மருவி ஆடி … கயிற்றின் இழுப்பிற்குத் தக்க
பல ஆட்டங்களை ஆடி,

விண் பறிந்து ஒளிரும் மி(ன்)னல் உரு அது என …
வானத்தில் வெளிப்பட்டு ஒளி வீசும் மின்னலின் உருவுபோல

ஓடி அங்கம் வெந்திடுவேனை … வெட்டென ஓடி உடல் வெந்து
போய் மறைகின்ற என்னையும்,

கருதி ஒரு பரம பொருள் ஈது என்று … அடியாருள் ஒருவனாக
எண்ணி, ஒப்பற்ற பரம் பொருள் இதுதான் என்று

என் செவி இணையில் அருளி … என்னுடைய இரண்டு
காதுகளிலும் உபதேசித்து அருள் செய்து,

உருவாகி வந்த என் கருவினையொடு அரு மலமும் நீறு
கண்டு
 … இம்மனித உருவில் கொண்டுவந்துள்ள என் பிறப்பு
வினையையும் அரிதான மும்மலங்களையும் பொடியாக்கி,

தண் தரு மா மென் கருணை பொழி கமல முகம் ஆறும் …
குளிர்ச்சியைத் தருவதும், பெருமையும் மென்மையும் கொண்டு
கருணையைப் பொழிகின்றதுமான தாமரை மலர் போன்ற ஆறு
முகங்களும்,

இந்துளம் தொடை மகுட முடியும் … கடப்ப மாலையும், இரத்தின
மணி மகுடங்களும்,

ஒளிர் நூபுரம் சரண் கலகலென … ஒளி பொருந்திய பாதங்களில்
அணிந்துள்ள சிலம்புகள் கலகல என்று ஒலிக்க,

மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் … மயிலின்
மேல் ஏறி வந்து, மகிழ்வுடன் என்னை ஆண்டருள்க.

திரி புரமும் மதன் உடலு(ம்) நீறு கண்டவன் … முப்புரங்களையும்,
மன்மதனுடைய உடலையும் எரித்துச் சாம்பலாக்கியவரும்,

தருணம் மழ விடையன் நடராஜன் … மிகவும் இளமை வாய்ந்த
ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், (சிதம்பரத்தில் பொற்சபையில்)
ஆனந்தத் தாண்டவம் புரிந்த நடராஜரும்,

எங்கணும் திகழ் அருண கிரி சொருபன் … அங்கிங்கு எனாதபடி
எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும்,

ஆதி அந்தம் அங்கு அறியாத … முதலும் முடிவும் அந்த அருண
கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத

சிவய நம நம சிவய காரணன் … சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின்
மூல காரணப் பொருளானவரும்,

சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தைதன் …
(அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி
நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது

திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே …
திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா
தேவி அருளிய மகனே,

குருகு கொடி உடன் மயிலில் ஏறி … சேவற் கொடியுடன் மயிலின்
மீது ஏறி,

மந்தரம் புவன கிரி சுழல … மந்தர மலை முதலாக உலகின் எல்லா
மலைகளும் சுழலவும்,

மறை ஆயிரங்களும் குமர குரு என … எண்ணிலா வேதங்களும்
குமர குரு என்று ஒலிக்கவும்,

வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே … வலிமை பொருந்திய
ஆதிசேஷன் பயப்படும்படியாகவும் வலம் வருபவனே,

குறமகளின் இடை துவள பாத செம்சிலம்பு ஒலிய …
வள்ளிநாயகியின் இடை துவளவும், பாதங்களில் அணிந்த செம்மை
வாய்ந்த சிலம்புகள் சப்தம் செய்ய,

ஒரு சசி மகளொடே கலந்து … ஒப்பற்ற இந்திராணியின் மகளான
தேவயானையோடு கலந்து,

திண்குரு மலையின் மருவு குரு நாத உம்பர் தம்
பெருமாளே.
 … வலிமையுள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும்
குருநாதனே, தேவர்களின் பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *